தொப்பி
தொப்பி (Hat) என்பது தலையில் அணியும் ஓர் அணியாகும். தொப்பிகளில் பல வகைகள் உள்ளன. ஆண்கள், பெண்கள் அணியும் தொப்பிகளில் வேறுபாடுகளும் உண்டு. வட்டம், நீள்வட்டம் என பல வடிவங்களில் தொப்பிகள் உள்ளன. அழகுக்காகவும், நிழலுக்காகவும், தூசு-மாசிலிருந்து காக்கவும், தொப்பிகள் பயன்படுகின்றன. சடங்குகள், சமயத் தேவைகளுக்கும் தொப்பிகள் பயன்படுவது உண்டு. படைத்துறையில், நாட்டினம், சேவைப் பிரிவு, தரநிலை, படைப்பிரிவு என்பவற்றைத் தொப்பிகள் குறித்துக் காட்டுவது உண்டு.[1][2][3]
வரலாறு
[தொகு]தொப்பியைக் காட்டும் மிகப் பழைய படங்களில் ஒன்று தேப்சுக் கல்லறையில் உள்ள ஓவியம் ஒன்றில் காணப்படுகிறது. ஒரு மனிதன் வைக்கோல் தொப்பியொன்றை அணிந்திருப்பதை இப் படம் காட்டுகிறது. எளிமையான கூம்புவடிவத் தொப்பியான பிலெயசு, பண்டைக் கிரேக்கத்திலும், ரோமிலும் விடுதலையான அடிமைகள் அணியும் பிரிகியன் தொப்பி என்பனவும் மிகவும் பழைமையான தொப்பிகளுள் அடங்குவன. கிரேக்கத்தின் பெட்டாசோசு எனப்படும் தொப்பியே இதுவரை அறியப்பட்டவைகளுள் விளிம்புடன் கூடிய முதல் தொப்பி ஆகும். பழைய காலத்தில் பெண்கள், முகத்திரை, முக்காடு போன்றவற்றை அணிந்தனர். 16 ஆம் நூற்றாண்டிலேயே பெண்களும் ஆண்கள் அணிவதுபோன்று செய்யப்பட்ட தொப்பிகளை அணியத் தொடங்கினர்.
19 ஆம் நூற்றாண்டின் முதல் பாதியில் பெண்கள் பொன்னெட் என்னும் ஒருவகைத் தொப்பியை அணிந்தனர். இது படிப்படியாக அளவில் பெரிதாகியதுடன், துணிப் பட்டிகள், பூக்கள், இறகுகள், சல்லடைத் துணிகள் போன்றவற்றால் அழகுபடுத்தப்பட்டன. அந்நூற்றாண்டில் இறுதியில் மேலும் பல பாணிகளில் தொப்பிகள் அறிமுகமாயின. 1930 களின் நடுப்பகுதியில் பெண்கள் தமது கூந்தலைக் குட்டையாக வெட்டத் தொடங்கினர். அதன் பின் அவர்கள் தலையை முற்றாக மூடும் தலைக் கவசம் போன்ற தொப்பிகளையும் அணிந்தனர்.
தொப்பியின் வடிவமைப்பு
[தொகு]தொப்பியொன்று நான்கு பகுதிகளைக் கொண்டிருக்கலாம்.
- முடி, தலையின் மேற்பகுதியை மூடும் பகுதி.
- மேல்மறைப்பு, முன்பகுதியில் விறைப்பாக நீண்டிருக்கும் பகுதி. இது வெய்யில், மழை போன்றவற்றிலிருந்து கண்களைப் பாதுகாக்கும்.
- விளிம்பு, தொப்பியின் முடிப்பகுதியின் அடிப்பக்கத்தில் கிடையாகத் தொப்பியின் நாற்புறமும் சூழ வட்டமாக இருக்கும் பகுதி.
- தொப்பிப்பட்டி, இது விளிம்புப் பகுதிக்கு மேல், முடியின் அடிப்பகுதியைச் சுற்றியிருக்கும் பட்டி.
இவற்றைவிட முடியின் அடிப்பகுதியைச் சுற்றி உட்புறமாக தோலால் அல்லது துணிபோன்ற வேறு பொருளால் ஆன பட்டியொன்று பொருத்தப்பட்டிருக்கலாம். இது வியர்வையால் தொப்பி பழுதாகாமல் இருக்கப் பயன்படுகிறது. இது வியர்வைப்பட்டி எனப்படும். சில தொப்பிகளில் பட்டுப் போன்ற துணிகளால் தொப்பியின் உட்புறம் அகவுறை இருக்கும்.
தொப்பி வகைகள்
[தொகு]- மேலும் தகவல்களுக்கு: தலையணிகளின் பட்டியல்
பெயர் | விளக்கம் | படம் |
---|---|---|
அசுக்கொட் தொப்பி | கடினமானது. ஆண்கள் அணியும் தொப்பி. தட்டைத் தொப்பியைப் போன்றது எனினும் இதன் கடினத்தன்மையாலும், வட்டமான வடிவத்தாலும் அதிலிருந்து வேறுபடுகின்றது. | |
அக்குப்ரா | உரோம அட்டையினால் செய்யப்பட்ட ஆசுத்திரேலியத் தொப்பி. அகலமான விளிம்புடன் கூடியது. | |
அயம் | மழைக்காலத்தில் அணியப்படும் கொரியாவின் பாரம்பரியத் தொப்பி. யோசியன் காலத்தில் (1392-1910) பெரும்பாலும் பெண்கள் அணிந்தது. | |
பலக்லாவா | முகம் மட்டும் திறந்திருக்கும்படி தலை முழுவதையும் மூடியிருக்கும் ஒரு வகைத் தலையணி. சிலவற்றில் முகத்தின் மேற்பகுதி அல்லது கண்கள் மட்டும் திறந்திருக்கும். இதைப் பனிச்சறுக்கு முகமூடி என்றும் அழைப்பதுண்டு. | |
பால்மோரல் தொப்பி | இசுக்கொட்டியர்களின் பாரம்பரியத் தொப்பி. இசுக்கொட்டிய உயர்நிலப் பகுதியினரின் ஆடைகளின் ஒரு பகுதியாக அணியப்படுவது. | |
பாரெட்டீனா | பாரம்பரியத் தொப்பி. சிவப்பு நிறமானது. தற்போது கட்டலன் மக்களின் அடையளமாக அணியப்படுவது. | |
அடிப்பந்துத் தொப்பி | ஒரு வகை மென் தொப்பி. நீண்டதும், இறுகியதும் வளைந்ததுமான உச்சிப்பகுதியைக் கொண்டது. | |
பீனி | முன்மறைப்புடன் கூடிய அல்லது அது இல்லாத விளிம்பில்லாத தொப்பி. ஒருகாலத்தில் பள்ளிச் சிறுவர்களால் பெரிதும் விரும்பப்பட்டது. சில தொப்பிகளின் ஒரு சுழலும் விசிறியும் இருப்பதுண்டு.
கனடா, நியூசிலாந்து, ஆசுத்திரேலியா, ஐக்கிய அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம் ஆகிய நாடுகளில் துக் என அழைக்கப்படும் பின்னல் தொப்பியையும் பீனி என அழைப்பதுண்டு. |
|
கரடித்தோல் தொப்பி | முழுச் சீருடையுடன் பட்டாளத்துக் காவலர்கள் அணியும் உரோமத்தாலான உயரமான தொப்பி. வாள் தாக்குதலிலிருந்து தப்புவதற்காக வடிவமைக்கப்பட்டது. பக்கிங்காம் மாளிகைக் காவலர்கள் இதனை அணிந்திருப்பதைக் காணலாம். | |
நீரெலித் தொப்பி | அழுத்தப்பட்ட பீவர் உரோமத்தால் செய்யப்பட்டது. | |
பெரே | மென்மையான வட்டத் தொப்பி அழுத்திய கம்பளியால் ஆனது. தட்டையான உச்சியைக் கொண்ட இத் தொப்பியை ஆண்களும், பெண்களும் அணிவர். பாரம்பரியமாக பிரான்சுடன் தொடர்புடையது. படைத்துறையில் பயன்படுவது. | |
பீக்கோர்ன் | இரண்டு மூலைகளைக் கொண்ட படைத்துறைத் தொப்பி. காக்ட் தொப்பிஎன்றும் அறியப்படுகிறது. | |
பிரேட்டா | மூன்று அல்லது நான்கு முகடுகள் அல்லது உச்சிகளுடன் கூடிய சதுர வடிவான தொப்பி. ரோமன் கத்தோலிக்கம், அங்கிலிக்கன், லூத்தெரன் கிறித்தவப் பிரிவுகளைச் சேர்ந்த குருமார்கள் அணிவது. | |
போட்டர் | தட்டையான விளிம்பையும், தட்டையான உச்சிப்பகுதியையும் கொண்ட புல் தொப்பி. முன்னாளில் கடலோடிகள் அணிந்தது. | |
பூனீ தொப்பி | ஒரு மென் பருத்தித் துணியாலான அகன்ற விளிம்பைக் கொண்ட தொப்பி. படைத்துறையினர் பயன்படுத்துவது. | |
Boss of the plains | எல்லப் பருவகாலங்களிலும் பயன்படக்கூடிய எடை குறைந்த தொப்பிஜான் பி. இசுட்டெட்சன் என்பவரால் வடிவமைக்கப்பட்டது. | |
பௌலர் தொப்பி | வட்டமான மேற்பகுதியுடன் கூடிய உரோம அட்டைத் தொப்பி. 1850 ஆம் ஆண்டின் லீசெசட்டரின் இரண்டாவது ஏர்ல் ஆன தாமசு கோக் என்பவரது வேலையாட்களுக்காகத் தயாரிக்கப்பட்டது. சில வேளைகளில் டேர்பி தொப்பி எனவும் அழைக்கப்படுகிறது. | |
பக்கெட் தொப்பி | ஒரு மென் பருத்தித் துணியாலான தொப்பி, அகலமான விளிம்பு கீழ்நோக்கிச் சரிந்திருக்கும். | |
பசுபி | மென்மையான உரோமத்தால் ஆன சிறிய, படைத்துறைத் தொப்பி. | |
கம்பைன் தொப்பி | அகன்ற விளிம்புடன் கூடிய புல் அல்லது உரோம அட்டையாலான தொப்பி. உயரமான மேற்பகுதியைக் கொண்டது. | |
கப்போட்டெயின் | 1590கள் தொடக்கம் 1640கள் வரை இங்கிலாந்திலும், வடமேற்கு ஐரோப்பாவிலும் அணியப்பட்டது. இதை யாத்திரீகர் தொப்பி என்றும் பரவலாக அழைத்தனர். |
தொப்பி அளவுகள்
[தொகு]தொப்பியின் அளவு ஒருவருடைய தலையின் சுற்றளவைக் கண்களுக்கு மேல் 1/2 அங்குல (1.3 சமீ) தூரத்தில் அளப்பதன் மூலம் பெறப்படும். உற்பத்தியாளரைப் பொறுத்து இது அங்குலத்தில் அல்லது சதம மீட்டரில் குறிக்கப்படும். உர்ரொம அட்டைத் தொப்பிகளை இழுத்து அணிய முடியும். கடினத் தொப்பிகள், அடிப்பந்துத் தொப்பிகள் போன்றவற்றைத் தேவையான அளவுக்குச் சரி செய்து கொள்ளலாம். சில மலிவான தொப்பிகள், சிறியவை, இடைத்தரமானவை, பெரியவை என மூன்று அளவுகளில் கிடைக்கும்.
முன்பக்கத்திலிருந்து பின்பக்கத்துக்கும், ஒரு பக்கத்திலிருந்து மறு பக்கத்துக்கும் இடையிலான தூரங்களை அங்குலத்தில் அளந்து அவற்றை இரண்டால் வகுப்பதன் மூலம் பாரம்பரியத் தொப்பிகளின் அளவுகள் குறிக்கப்படுகின்றன. ஐக்கிய இராச்சியத்தில் தொப்பி அளவுகள் அதே அளவுடைய அமெரிக்கத் தொப்பிகளிலும் 1/8 அங்குலம் சிறியவை.
அளவு | இளைஞர் S/M | இளைஞர் L/XL | XXS | XS | S | M | L | XL | XXL | XXXL | ||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
வயது (ஆண்டுகள்) | 0 | ½ | 1 | 1½ | 2 | |||||||||
சுற்றளவு சமீ இல் | 34 | 43 | 47 | 48 | 49 | 50 | 51 - 52 | 53 - 54 | 55 - 56 | 57 - 58 | 59 - 60 | 61 - 62 | 63 - 64 | 65 - 66 |
சுற்றளவு அங்குலத்தில் | 13⅜ | 17 | 18½ | 18⅞ | 19¼ | 19¾ | 20⅛ - 20½ | 20⅞ - 21¼ | 21⅝ - 22 | 22½ - 22⅞ | 23¼ - 23⅝ | 24 - 24⅜ | 24¾ - 25¼ | 25⅝ - 26 |
ஐ,இ தொப்பி அளவு | 5¾ | 5⅞ | 6 | 6⅛ | 6¼ - 6⅜ | 6½ - 6⅝ | 6¾ - 6⅞ | 7 - 7⅛ | 7¼ - 7⅜ | 7½ - 7⅝ | 7¾ - 7⅞ | 8 - 8⅛ | ||
ஐ.அ தொப்பி அளவு | 5⅞ | 6 | 6⅛ | 6¼ | 6⅜ - 6½ | 6⅝ - 6¾ | 6⅞ - 7 | 7⅛ - 7¼ | 7⅜ - 7½ | 7⅝ - 7¾ | 7⅞ - 8 | 8⅛ - 8¼ | ||
பிரெஞ்சு | 0 | ½ | 1 | 1½ | 2 - 2½ | 3 - 3½ | 4 - 4½ | 5 - 5½ | 6 - 6½ | 7 - 7½ | 8 - 8½ | 9 - 9½ |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Pauline Thomas (2007-09-08). "The Wearing of Hats Fashion History". Fashion-era.com. பார்க்கப்பட்ட நாள் 2011-07-02.
- ↑ "The social meanings of hats". University of Chicago Press. பார்க்கப்பட்ட நாள் 2011-07-02.
- ↑ "Insignia:The Way You Tell Who's Who in the Military". United States Department of Defense. Archived from the original on 2012-04-14. பார்க்கப்பட்ட நாள் 2011-07-02.