வரலாறு என்ற சொல் இறந்த காலத்தைப் பற்றிய தகவல்கள் என்னும் பொருளிலேயே பொதுப்படையாகப் பயன்படுகிறது. ஒரு கற்கைத் துறையைக் குறிக்கும் போது, பதிவுசெய்யப்பட்ட மனித சமுதாயங்களின் கடந்தகாலமான, மனிதவரலாற்றையே குறிக்கின்றது. வரலாற்றறிஞர்கள், எழுதப்பட்ட அல்லது அச்சிடப்பட்ட பதிவுகள், நேர்காணல் (வாய்மொழி வரலாறு), மற்றும் தொல்பொருளியல் உள்ளிட்ட பலவகையான மூலங்களைப் பயன்படுத்துகிறார்கள். மனிதனால் பதிவு செய்யப்படுவதற்கு முன் நிகழ்ந்தவை வரலாற்றுக்கு முற்பட்டவை எனப்படுகின்றன.
பல்லவர் என்போர் தென்னிந்தியாவில் களப்பிரர்கள் வீழ்ச்சிக்குப் பிறகு கி.பி. 250 முதல் கி.பி. 850 வரை சுமார் அறுநூற்று ஐம்பது ஆண்டுகள் தமிழகத்தில் நிலைத்து ஆட்சி புரிந்தவர்கள். இவர்கள் இலங்கையை அடுத்த மணிபல்லவத் தீவிலிருந்து வந்தவர்கள்; தொண்டை மண்டலத்துப் பழங்குடிகள்; பஹலவர்கள் என்னும் பாரசீக மரபினர் என்று பல்வேறு கருத்து வேற்றுமைகள் உண்டு. அவர்களைப் பற்றிக் கிடைத்துள்ள சான்று மூலங்களைக்கொண்டு, பட்ட முறைமையை முற்றும் முறைப்படுத்தவும் முடியவில்லை. 'வின்சென்ட் ஸ்மித்' என்னும் ஆங்கில வரலாற்றாசிரியர் தமது நூலின் முடிவாகப் பல்லவர் தென்னிந்தியரே என்று வரையறுத்துள்ளார். சாதவாகனப் பேரரசில் குறுநில மன்னர்களாகவும் ஆட்சியாளர்களாகவும் செயல்பட்டு வந்த இவர்கள் சாதவாகனப் பேரரசு வலுக்குன்றியதும் கிருஷ்ணா ஆற்றிற்குத் தெற்குப் பகுதியை ஆளத் தொடங்கினர்.
மைசூரின் புலி என அழைக்கப்பட்டவர் திப்பு சுல்தான். 1782 ஆம் ஆண்டிலிருந்து 1799 ஆம் ஆண்டுவரை மைசூர் பேரரசை ஆண்ட இவர் பிரித்தானிய கிழக்கிந்திய கம்பனியுடன்பல முறைப் போரிட்டவர். ஆர்த்தர் வெல்லஸ்லியின் தலைமையிலான ஆங்கிலப் படைகளுடன் நடைபெற்ற நான்காவது ஆங்கிலேய மைசூர்ப் போரில் திப்பு மரணமடைந்தார். படத்தில் காணப்படும் ஓவியம் 1800ம் ஆண்டு என்றி சிங்கில்டன் என்பவரால் வரையப்பட்டது. இதில் போரிட்டு மடியும் திப்புவின் இறுதி நிமிடங்கள் சித்தரிக்கப்பட்டுள்ளன.