உள்ளடக்கத்துக்குச் செல்

தோம்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தோம்பு என்பது இலங்கையைப் போத்துக்கீசர் ஆண்டபோதும் பின்னர் ஒல்லாந்தர் ஆண்ட காலத்திலும், உருவாக்கப்பட்டுப் புழக்கத்தில் இருந்த நில உடைமைப் பட்டியலைக் குறிக்கும். அரசாங்கத்துக்கு உரிய வரியை வசூலிப்பதிலும், குடிமக்களால் அரசாங்கத்துக்காகச் செய்யப்படவேண்டிய ஊழியத்தை செய்விப்பதையும் ஒழுங்குபடுத்தும் நோக்கிலேயே தோம்புகள் உருவாக்கப்பட்டன.

விபரங்கள்

[தொகு]

ஒவ்வொரு ஊர்களுக்கும் தனித்தனியாகத் தோம்புகள் எழுதப்பட்டன. அவ்வூர்களிலுள்ள நிலங்கள் தொடர்பில், நிலத்தின் பெயர், அதன் பரப்பளவு, உரிமையாளர் பெயர், அவர் சாதி, நிலத்தில் அடங்கியுள்ள பயன்தரு மரங்கள், வீடு முதலிய உடைமைகள், அவர்கள் அரசாங்கத்துக்கும், அதிகாரிகளுக்கும் செய்யவேண்டிய கடமைகளும், செலுத்தவேண்டிய வரிகளும், அவர்கள் செய்யவேண்டிய ஊழியம் பற்றிய விபரங்கள் என்பன போன்ற தகவல்கள் அவற்றில் அடங்கியிருந்தன.

போத்துக்கீசர் தோம்பு

[தொகு]

இலங்கையின் கோட்டே இராச்சியம் போத்துக்கீசர் வசம் சென்றபின், வரி வசூலிப்பை ஒழுங்குபடுத்துமுகமாக, தோம்பு எழுதும் வேலைகள் தொடங்கப்பட்டன. இதற்காக 1608 ஆம் ஆண்டில் அதிகாரி ஒருவர் போர்த்துக்கல்லிலிருந்து அனுப்பப்பட்டார்.[1] கோட்டே இராச்சியத்துள் அடங்கியிருந்த 21, 873 ஊர்களுக்கான தோம்பு தயாரிக்கும் வேலை பல ஆண்டுகளாக நடைபெற்றது. நான்கு தொகுதிகளாகத் தயாரிக்கப்பட்ட கோட்டே இராச்சியத்துக்கான தோம்புகளில் இரண்டு தொகுதிகள் 1614 ஆம் ஆண்டிலும், எஞ்சிய இரண்டு தொகுதிகள் 1618 இலும் நிறைவுற்றன.

1619 ஆம் ஆண்டில் யாழ்ப்பாண இராச்சியம் போத்துக்கீச அரசனின் நேரடிக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட பின்னர், அதே ஆண்டிலேயே தோம்பு தயாரிக்கும் வேலைகளுக்கான ஆணை, கோவாவிலிருந்து பிறப்பிக்கப்பட்டது[2]. இதற்காகக் கொழும்பிலிருந்து அதிகாரி ஒருவர் 1620 ஆம் ஆண்டில் யாழ்ப்பாணத்துக்கு அனுப்பப்பட்டார். எனினும், யாழ்ப்பாணம் தொடர்ந்தும் குழம்பிய நிலையிலேயே காணப்பட்டதால், இவ்வேலைகள் ஆரம்பிக்கப்படவில்லை. இறுதியாக 1623 ஆம் ஆண்டில் யாழ்ப்பாணத் தோம்பு வேலைகள் தொடங்கப்பட்டதாயினும் பல காரணங்களால், 1645 ஆம் ஆண்டுக்கு முன் ஒரு முழுமையான தோம்பு தயாரித்து முடிக்கப்படவில்லை.

யாழ்ப்பாணத் தோம்பு பல தொகுதிகளை உள்ளடக்கியிருந்தது. யாழ்ப்பாணக் குடாநாடு மற்றும் தீவுப் பகுதிகளை உள்ளடக்கி 7 தொகுதிகள் தயாரிக்கப்பட்டிருந்தன. இவை மொத்தமாக 2900 கோப்புகளை (folios) உள்ளடக்கியிருந்ததாகக் கூறப்படுகிறது[3]. இக்கோப்புகள் அனைத்தும் டச்சு அரசின் காலத்தில் கடைசித்தடவையாக 1754 இல் மறு சீரமைக்கப்பட்டன. இவற்றின் மூலப்பிரதிகள் யாழ்ப்பாணக் கச்சேரியில் சிறப்பு உத்தியோகத்தர் ஒருவரின் பொறுப்பில் விடப்பட்டன. யாழ்ப்பாணத்தின் பிரிவுகளுக்குட்பட்ட (parish) கோப்புகளின் பிரதிகள் அப்பிரிவுகளின் உடையார்களிடம் பொறுப்புக் கொடுக்கப்பட்டன. நில உரிமையாளர்கள் தமது காணிகளை விற்கும்போதோ அல்லது குத்தகைக்குக் கொடுக்கும் போதோ அக்காணிகளின் பத்திரத்தின் பிரதியை உடையாரிடம் பெற்றுக் கொள்ளமுடியும்[4]. யாழ்ப்பாண இராச்சியத்துள் அடங்கியிருந்த மன்னார், மாதோட்டம், வன்னி ஆகிய பகுதிகளுக்கும் தனியான தோம்புகள் எழுதப்பட்டிருந்தன.

1864 ஆம் ஆண்டில் நிலங்களைப் பதியும் சட்டம் (Land Registration) அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் தோம்புகளின் பயன் அற்றுப் போய்விட்டன.

போத்துக்கீசர் தயாரித்த தோம்புகள் எதுவும் இன்று பார்வைக்குக் கிடைக்கவில்லை. கொழும்பு, கோவா, போத்துக்கல் ஆகிய இடங்கள் உட்பட உலகிலுள்ள ஆவணக் காப்பகங்கள் எதிலும் இவற்றின் பிரதிகள் இல்லை என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்[3].

அடிக்குறிப்புகள்

[தொகு]
  1. பீரிஸ், பீ. ஈ, 1914. p.29
  2. அபயசிங்க. டிக்கிரி, 1986. p.45
  3. 3.0 3.1 அபயசிங்க. டிக்கிரி, 1986. p.52
  4. John H. Martyn, Notes on Jaffna, American Ceylon Mission Press, தெல்லிப்பழை, Ceylon, 1923, (2ம் பதிப்பு: 2003) பக்.150

உசாத்துணைகள்

[தொகு]
  • அபயசிங்க. டிக்கிரி, Jaffna Under the Portuguese, லேக் ஹவுஸ் இன்வெஸ்ட்மெண்ட் லிட்., கொழும்பு. 1986. (ஆங்கில மொழியில்)
  • பீரிஸ், பீ. ஈ, Ceylon the Portuguese Era., தொகுதி 2, 1914, இரண்டாம் பதிப்பு, திஸ்சர பிரகாசகயோ லிட்., தெஹிவளை, 1983. (ஆங்கில மொழியில்)
  • பீரிஸ், பீ. ஈ, The Kingdom of Jafnapatam 1645 Being an Account of its Administrative Organisation as Derived from the Portuguese Archives, த சிலோன் டெய்லி நியூஸ் பிரிண்டர்ஸ், 1920, மறுபதிப்பு ஏசியன் எஜுகேஷனல் சேர்விசஸ், புது டில்லி, 1995. (ஆங்கில மொழியில்)
"https://ta.wikipedia.org/w/index.php?title=தோம்பு&oldid=2916112" இலிருந்து மீள்விக்கப்பட்டது