உள்ளடக்கத்துக்குச் செல்

லாவோ சீ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
, லாவோ ஸீ
டாவோயிசத்தின் கடவுளாக வர்ணிக்கப்படும் லாவோ ஸீ
பிறப்புகி.மு. 604, சோ டைனாஸ்டி
இறப்புசோ டைனாஸ்டி
காலம்பண்டைய தத்துவவியல்
பகுதிகிழக்காசிய தத்துவவியல்
பள்ளிதாவோயியம்
குறிப்பிடத்தக்க
எண்ணக்கருக்கள்
வு வெய்
செல்வாக்குக்கு உட்பட்டோர்
  • சுவங் சூ

லாவோ சீ (Lao Zi மற்றும் Lao Tsu என்றும் எழுதப்படும்) [1] சீனாவின் முக்கியமான மெய்யியலாளர்களில் ஒருவர். ஆனாலும், இவர் தனியொருவரா அல்லது லாவோ சீ என்ற யோசனைகள் நிமித்தம் சேர்ந்த வெவ்வேறான தனிநபர்களின் கூட்டா என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. இதன் காரணமாக இவரின் பிறந்த திகதி இன்னும் அறியப்படாமலேயே காணப்படுகிறது.

லாவோ சீ பற்றி தற்போது அறியப்படும் செய்திகளில் மிக முந்தைய குறிப்புகளில் கி.மு முதல் நுாற்றாண்டில் சிமா சியான் (Sima Qian) என்ற வரலாற்று ஆசிரியரின் "மதிப்புக்குரிய வரலாற்றாளரின் ஆவணப் பதிவுகள்" என்ற நுாலிலிருந்து பெறப்பட்டவையாகும். வேறு சிலரின் கண்ணோட்டத்தில், லாவோ சீ கி.மு 6 அல்லது 5 ஆம் நூற்றாண்டில் கன்பூசியசுக்கு சமகாலத்தவராகக் கூறப்படுகிறார். அவரது சீன வம்சாவளி குடும்பப் பெயர் லி (李) என்பதாகும். அவரது தனிப்பட்ட பெயர் எர் அல்லது டான் ஆகும். லாவோ சீ வடக்குச் சீனாவில் பிறந்து வாழ்ந்தார். அவர் தம் வாழ்நாளில் ஒரு பகுதியில், சூ அரசர்களின் தலைநகராக இருந்த லோயாங் நகரில் ஒரு வரலாற்று ஆசிரியராக அல்லது அரசு ஆவணக் காப்பாாளராக பணியாற்றியுள்ளார். லாவோ சீ என்பது அவரது இயற்பெயர் அன்று. அது ”மூத்த குரு” எனப் பொருள்படும் ஒரு விருதுப்பெயரே ஆகும்.[2]

சவு வம்சம் வீழ்ச்சியடைந்ததை உணர்ந்த தத்துவஞானி அவ்விடம் விட்டு அகன்று, குய்ன் மாகாணத்தை அம்மாகாணத்தின் நுழைவுவாயிலாக இருந்த இக்சியாங்கு கனவாய் வழியாக வந்தடைந்தார். அந்நிலத்தின் புகழ்பெற்ற பாதுகாவலனான இன்க்சி (Yinxi) அவரிடம் ஒரு தாவோ குறித்த புத்தகத்தை எழுதித்தந்து விட்டு தனது தேசத்தை விட்டு வெளியேறும்படி இறைஞ்சினார். அதன்பின், லாவோ சீ 2000 எழுத்துக்களில் இரண்டு பிரிவுகளில் ஒரு புத்தகத்தை எழுதினார், அதில் அவர் தாவ் (உண்மையில் "வழி") மற்றும் டி (அதன் "நல்லொழுக்கம்") பற்றிய அவரது கருத்துக்களை முன்வைத்தார்: இந்த நுாலே தாவோ தே ஜிங் (Tao Te Ching - 道德經) என்று அழைக்கப்படுகிறது.[3] இவரின் இந்த நூலின் படி, தாவோ எனப்படுகின்ற வழி மாற்றமடையாது என்பதுவும் அதுவே பிரபஞ்ச உண்மையாகவும் விளக்கப்படுகிறது. இவரின் தாவோயியம் என்ற தத்துவக் கோட்பாடு சீனாவில் மிகவும் புகழ் பெற்றது. தாவோயியம் என்ற கோட்பாட்டின் முதன்மையான கடவுளாகவும் லாவோ சீ பொது மக்களால் இனங் காணப்படுகின்றார். இவர் கிமு 6 ஆறாம் நூற்றாண்டில் வாழ்ந்ததாக சீன மரபு சொல்கிறது.

லாவோ சீயின் செல்வாக்கு சீனாவிற்கு அப்பாலும் பரவியுள்ளது. நவீன காலத்தில், ஆசியாவிலும், மேற்கத்திய உலகிலும் தாவோயியம் சென்றடைந்துள்ளது. ஹாங்காங், தைவான், மற்றும் தென்கிழக்கு ஆசியா மற்றும் அப்பகுதியில் உள்ள சீனர்கள் மத்தியில், தாவோயியம் ஒரு வாழ்க்கை பாரம்பரியமாகவே ஆகிவிட்டது. தாவோயிய நம்பிக்கைகளும், நடைமுறைகளும் கொரிய மற்றும் சப்பானிய கலாச்சாரங்களின் உருவாக்கத்தில் பங்களித்திருக்கின்றன.

தாவோ தே ஜிங்

[தொகு]

தாவோ தே ஜிங் நூல் எழுதப்பட்டதே லாவோ சீ விரும்பாத ஒரு சூழல் என நம்பப்படுகிறது. சவு வம்சம் வீழ்ச்சி அடைந்து கொண்டிருந்த நேரத்தில் லாவோ சீ செங்சவு (தற்போதைய லோயாங்) நகரத்திலிருந்து வெளியேறும் போது எல்லையில் இருந்த புகழ் பெற்ற பாதுகாவலன் இன்க்சி லாவோ சீயிடம் இந்த தேசத்தை அல்லது நகரத்தை விட்டு வெளியேற வேண்டுமானால் தங்கள் வசம் உள்ள ஞானத்தை எழுத்து வடிவில் பதிவு செய்து தந்தால் மட்டுமே முடியும் என்று நிர்ப்பந்தம் செய்துள்ளான். இதன் விளைவாகவே தாவோ தே ஜிங் எழுதப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. ஏனெனில், இந்த நூலின் முதல் வாியானது ”சொல்லக்கூடிய தாவோ முழுமையான தாவோ அல்ல” என்பதாக அமைந்துள்ளது. இந்த நுால் தாவ் நெறியின் தத்துவங்களைக் கூறுகிறது. இந்த நுால் ”விழுமிய நெறியும் அதன் ஆன்மீக ஆற்றலும்” என்று பொருள் படும் வேத நுால் எனலாம். இது மறைநுட்பம் வாய்ந்த ஓர் கிடைத்தற்கரிய நுாலாகும். இந்த நுால் ஒரு புதிரான நடையில் எழுதப்பட்டுள்ளது. வாசிப்பவரின் மனநிலை மற்றும் பக்குவத்திற்கேற்ப பல்வேறு பொருள்களுக்கு இடமளிக்கிறது. தாவோ தே ஜிங் நுாலின் தொடக்கத்தில் ”தாவ்” என்பதற்கு இயற்கை அல்லது இயற்கை நெறி என்று பொருள் சொல்லப்படுகிறது. தற்போதைய தாவோ தே ஜிங் நுாலில் உள்ளவற்றில் உள்ள வரிகள் லாவோ சீயின் வாழ்விற்குப் பிறகு சேர்க்கப்பட்டவைகளாகக் கூட இருக்கலாம். காவலன் இன்க்சி லாவோ சீயின் வேத நுால் வரிகளால் மனமாற்றமடைந்து அவரின் சீடராகவே சென்று விட்டதாகவும் சீன மக்களிடையே நம்பிக்கைகள் காணப்படுகின்றன.[4] இன்னும் சில நம்பிக்கைகள் வயதான குரு இந்தியாவிற்குப் பயணித்ததாகவும் சித்தார்த்த கௌதமரின் அதாவது புத்தரின் குருவாக இருந்தார் எனவும் கருதுகின்றன.[5][6] தாவோவுக்கு எதிராகத் தனிநபர்கள் போராடக்கூடாது என்றும், அதற்கு அடிபணிந்து, அதற்காகப் பணிபுரிய வேண்டும் என்றும் தாவோயியம் கூறுகிறது.[2]

இந்த நுாலில் இயற்கையின் வழியில் செல்லுதல், செயல்படாமையின் தத்துவம் போன்றவை வலியுறுத்தப்படுகிறது. தாவோ மிதத்தை, மெலிவை, குறைவை, தேய்வைப் பற்றி மட்டுமே பேசுகிறது. வலியது, கடினமானது, அதீதம், மூர்க்கம் எல்லாம் மரணத்தின் அறிகுறிகள் என்கிறது. போர், ஆயுதங்கள், அதிகாரக் குவிப்பு போன்றவற்றிற்கு எதிரான கருத்துக்களை நுால் முழுவதிலும் காண முடிகிறது. ஆக்கிரமிப்பு, ஆதிக்கம், போர், மரண தண்டனை போன்றவற்றை தவிர்ப்பது, முற்றிலும் எளிமையாக வாழ்வது, தீவிர அதிகாரத்தை வற்புறுத்த மறுப்பது ஆகிய மூன்று வழிகளைப் பரிந்துரைக்கிறது. இதன் மூலம் நடைமுறை வாழ்க்கை மற்றும் நடைமுறை அரசியல் எளிமைப்படுத்தப்படுகிறது.[7]

தாவோ தே ஜிங் நுாலின் படி தாவோவானது பத்து விதமான விழுமியங்களைக் கொண்டிருப்பதாக சொல்லப்படுகிறது. பணிவு, தீர்ப்புரைக்காத தன்மை, பெருந்தன்மை, நெகிழ்வுத்தன்மை மற்றும் அமைதி போன்றவை அவற்றில் சில. தாவோ "விளைவுகள் அல்லது எதிர்பார்ப்புகளுடன் இணைக்கப்படாத செயல்கள்" பற்றியும் எடுத்துரைக்கிறது. ஒரு மனிதன் இவ்வாறான செயல்திறம் மற்றும் விழுமியங்களுக்குத் தன்னைப் பழக்கப்படுத்திக் கொண்டால் வாழ்க்கையில் வெற்றி பெற முடியும் என்கிறது. இந்த நுாலின் படி, தாவோவானது, தனிமனித ஒழுக்கம் மற்றும் விருப்பத்தை வெளிப்படுத்தும் விதத்தினால் தான் ஒருவர் ஞானத்தையும், ஒருமையையும் அடைய முடியும் என்கிறது.[8]

லாவோ சீயின் போதனைகள்

[தொகு]
  • மற்றவர்களைப் பற்றி அறிந்திருப்பது புத்திசாலித்தனம்
    உன்னைப் பற்றி அறிந்திருப்பது உண்மையான ஞானம்.
  • மற்றவர்களை அடக்கி ஆளும் தன்மை உன்னுடைய திறமை, உன்னை நீயே அடக்கி ஆள்வது உனது உண்மையான வல்லமை.
  • உற்று நோக்கினாலும் எதைப் பார்க்கமுடியவில்லையோ அது வெறுமை
    செவிமடுத்தாலும் எதைக் கேட்க முடியவில்லையோ அது அரிது
  • நீ யாரிடம் உன் இரகசியங்களைச் சொல்கிறாயோ அவரிடம் உன் சுதந்திரத்தை இழப்பாய்
  • மற்றவர்களை அடக்கி ஆளுதல் வலிமை
    உங்களை அடக்கி ஆளுதலே உண்மையான சக்தி
  • கடினமான வேலைகளை அவை எளிதாக இருக்கும் போது செய்யுங்கள்
    மிகப்பெரிய விஷயங்களை அவை சிறிதாக இருக்கும் போது செய்யுங்கள்
  • நலம் மிகப்பெரிய சொத்து
    மன நிறைவு மிகப்பெரிய புதையல்
    நம்பிக்கை மிகப்பெரிய நண்பன்
  • ஆயிரம் மைல்களுக்கான பயணம் ஒரு அடியிலேயே தொடங்குகின்றது
  • பானையின் உபயோகத்தன்மை அதன் வெற்றிடத்திலேயே உள்ளது
  • அறிவிலியாகவும், அற்பமானவராகவும் இருப்பதை விட, அதிகாரத்தைப் பெறுவதற்கு அல்லது செலுத்துவதற்குத் தீவிரமாக ஆசைப்படுவது அப்படியொன்றும் நெறி கெட்ட செயலன்று
  • தண்ணீர் மிக மிக மென்மையானது. அது எவ்வித எதிர்ப்பும் காட்டாமல், மிக மின மென்மையானது. அது எவ்வித எதிர்ப்பும் காட்டாமல், மிகத் தாழ்ந்த இடங்களிலும் போய்ப் பாய்கிறது. மிக அற்பமான இயற்கை ஆற்றலுக்குக்கூட எதிர்ப்பின்றிப் பணிகிறது. எனவே தான், நீர அழிக்க முடியாமல் நிலைபேறுடையதாக விளங்குகிறது. அதே சமயம், மிகக் கடினமாக இருக்கும் பாறைகள் நாளடைவில் நலிந்து, சிதைந்து, சிதறிப் போகின்றன.
  • ஒரு தனி மனிதனுக்கு எளிமையும், இயற்குணமும் பெரும்பாலும் ஏற்புடையவை.
  • வன்முறையைத் தவிர்க்க வேண்டும்.
  • பணத்துக்காக அல்லது புகழுக்காகப் பாடுபடுவதை விட வேண்டும்.
  • உலகத்துக்குச் சொல்வதற்கு மூன்று விஷயங்கள் உள்ளது. அவை 1) எளிமை, 2) பொறுமை, 3) கருணை - இவை மூன்றும் உலகத்திற்கான புதையல்கள்
  • உலகை சீர்திருத்த ஒருவர் முயலலாகாது. மாறாக, உலகை மதிக்க வேண்டும்.
  • தன்னைத்தானே வரையறை செய்பவன் ஒரு போதும் தன்னை அறிந்திருக்க முடியாது.
  • தீமைக்கு எதிராக எதையும் செய்யாதிருங்கள். தீயது தானாகவே அழிந்து விடும்
  • மௌனம் வலிமையின் சிறந்த உற்பத்தியிடமாகும்.
  • தான் எதை அறிந்திருக்கவில்லை என்பதை அறிந்தவரே அறிவு மிகுந்த மனிதர் ஆவார்.[2][9][10]

லாவோ சீ - மானிட வாழ்வியலில் ஏற்படுத்திய தாக்கம்

[தொகு]

எந்தவொரு ஆட்சியாளரிடமும் எந்த நேரத்திலும் பணியாற்ற மறுக்க, சீன வரலாற்றின் எல்லோரிடமிருந்தும் அதிகாரம் பெற்ற அதிகாரிகள், கன்பூசியம் சாராத தத்துவஞானிகள், குறிப்பாக லாவோ சீ மற்றும் சுவாங்சீ ஆகியோரிடமிருந்து அதிகாரத்தை எடுத்துக் கொண்டனர். மரபுவழியான மதிப்பீட்டின்படி லாவோ சீயின் மிகவும் பிரபலமான சீடர் சுவாங் சீ ஆவார். சீனாவின் எழுத்தறிவு மற்றும் பண்பாடு இவற்றின் மீது பெரும் செல்வாக்கைக் கொண்டிருந்தார். இவர் எழுதிய சுவாங்சீ (நூல்) தாவோ தே ஜிங் நுாலைத் தொடர்ந்த தாவோயியத்தின் கொள்கைகளைப் பறைசாற்றும் இரண்டாவது புனித நுாலாகக் கருதப்படுகிறது.

லாவோ சீயின் தாக்கத்தால் பாதிப்புக்குள்ளான அரசியல் தத்துவவாதிகள் அரசியலமைப்பியலின் தலைமைத்துவத்தில் மனதில் பணிவும், நெறி சார்ந்த அல்லது சமாதானத்தை விரும்புகின்ற அல்லது தந்திரம் சார்ந்த முடிவுகளை எதிர்நோக்கி தடையற்ற அணுகுமுறையையும் முன்வைக்கின்றனர். ஒரு வித்தியாசமான சூழலில், சர்வாதிகார எதிர்ப்பு இயக்கங்கள் வலிமையற்றவர்களின் வலிமைகளை உயர்த்திய லாவோ சீயின் போதனைகளை ஆரத்தழுவிக்கொண்டன.[11] லாவோ சீ வரம்புக்குட்பட்ட அரசு (limited government) அமைப்பின் (ஆதரவாளராக இருந்தார்.[12] இடதுசாரி ஆதரவு அரசியலாளர்கள் லாவோ சீ யின் கருத்துக்களால் தாக்கத்துக்குள்ளாயினர். ரூடால்ப் இராக்கர் எனும் அரசிலிக் கோட்பாட்டு எழுத்தாளர் மற்றும் ஆர்வலர், 1937 ஆம் ஆண்டில் அவரது தேசியவாதம் மற்றும் கலாச்சாரம் என்ற நுாலில், லாவோசீயின் "கண்ணியமான ஞானம்" மற்றும் அரசியல் சக்திக்கும் மக்கள் மற்றும் சமூகத்தின் கலாச்சார நடவடிக்கைகள் ஆகியவற்றிற்கும் இடையே உள்ள எதிர்ப்பை புரிந்து கொண்ட பாங்கு ஆகியவற்றைப் பாராட்டியுள்ளார்.[13] அண்மையில், ஜான் பி கிளார்க் மற்றும் அர்சலா கே. லா குவின் போன்ற அரசிலிக் கோட்பாட்டுவாதிகள் அரசிலிக் கோட்பாடு மற்றும் தாவோயியம் ஆகியவற்றுக்கு இடையேயான தொடர்பு பற்றி குறிப்பாக லாவோ சீயின் போதனைகளை மேற்கோள் காட்டி விளக்குகின்றனர்.[14]

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Lao-tzu". Random House Webster's Unabridged Dictionary.
  2. 2.0 2.1 2.2 Michael H. Hart (1992). The 100. New York: Kensington Publishing Corporation. pp. 363–366. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8065-1350-0.
  3. Alan Chan (15 December 2001). "Laozi". Stanfor Encyclopedia of Philosophy. பார்க்கப்பட்ட நாள் 29 செப்டம்பர் 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  4. (Kohn & Lafargue 1998, ப. 14, 17, 54–55)
  5. (Simpkins & Simpkins 1999, ப. 12–13)
  6. (Morgan 2001, ப. 224–25)
  7. ஆசை (24 சனவரி 2016). "தாவோ தே ஜிங்: செயல்படாமையின் வேத நூல்". கட்டுரை. தி இந்து. பார்க்கப்பட்ட நாள் 22 ஏப்ரல் 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  8. "Tao Te Ching". shmoop premium. பார்க்கப்பட்ட நாள் 30 செப்டம்பர் 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  9. "10 Life Changing Lessons To Learn From Lao Tzu". Power of Positivity. பார்க்கப்பட்ட நாள் 30 செப்டம்பர் 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  10. "Tao Te Ching Quotes". Goodreads. பார்க்கப்பட்ட நாள் 30 செப்டம்பர் 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  11. (Roberts 2001, ப. 1–2)
  12. Dorn, James A. (2008). "Lao Tzu (c. 600 B.C.)". The Encyclopedia of Libertarianism. Thousand Oaks, CA: SAGE; Cato Institute. 282–83. DOI:10.4135/9781412965811.n169. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4129-6580-4. இணையக் கணினி நூலக மையம் 750831024. 
  13. (Black Rose Books 1997, ப. 256, 82)
  14. Clark, John P. "Master Lao and the Anarchist Prince". Archived from the original on 2017-10-20. பார்க்கப்பட்ட நாள் 2017-10-01.
"https://ta.wikipedia.org/w/index.php?title=லாவோ_சீ&oldid=3859792" இலிருந்து மீள்விக்கப்பட்டது