உள்ளடக்கத்துக்குச் செல்

அபுகிடா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

எழுத்து முறைகள்
வரலாறு
வரிவடிவம்
பட்டியல்
வகைகள்
ஒலியனெழுத்து
Featural alphabet
அப்ஜாட்
அபுகிடா
அசையெழுத்து
உருபனெழுத்து
தொடர்புள்ள
தலைப்புக்கள்
படவெழுத்து
கருத்தெழுத்து

அபுகிடா (Abugida) என்பது ஒரு வகை எழுத்து முறை ஆகும். இது உயிர்மெய் எழுத்துகளை அடிப்படையாகக் கொண்டது. அபுகிடா எழுத்து முறையில் மெய்யெழுத்து உயிரெழுத்தைத் தன்னுள் கொண்டே வரும். ஏற்ற குறியிடுவதன் மூலம் அம்மெய்யெழுத்திலுள்ள உயிரெழுத்தின் ஒலியை மாற்றி அமைக்கலாம். எ-டு 'க'வுடன் துணைக்கால் சேர்த்தால் 'கா'ஆகிறது. இது அபுகிடாவின் ஒரு இயல்பாகும்.[1][2][3]

உலகில் புழக்கத்தில் உள்ள எழுத்து முறைகளில் அரைப்பங்கு அளவான எழுத்து முறைகள் அபுகிடா வகையைச் சேர்ந்தவையே. இவற்றுள், தெற்காசியாவிலும், தென்கிழக்காசியாவிலும் புழக்கத்திலுள்ள பிராமியக் குடும்ப எழுத்து முறைகளான நகரி, தேவநாகரி, தெலுங்கு, மலையாளம், கன்னடம், சிங்களம் போன்ற எழுத்துக்களும் இவ்வபுகிடா இனத்தையே சாரும்.

அமைப்பு

[தொகு]

பொதுவாக, அபுகிடா முறையைச் சேர்ந்த ஒரு முழு எழுத்து ஒரு மெய்யெழுத்தைக் குறிக்கிறது. இவ்வெழுத்துக்கள் ஒன்றன்பின் ஒன்றாக ஒரு குறிப்பிட்ட திசையில் எழுதப்பட்டு வருகின்றன. உயிரொலிகள் மெய்யெழுத்துக்களில் தங்கியுள்ளன. தனியான அடையாளக் குறிகளை மெய்யெழுத்துக்களுடன் சேர்ப்பதன் மூலம் அல்லது மெய்யெழுத்திலேயே சிறிய மாற்றங்களை ஏற்படுத்துவதன் மூலம் மெய்யெழுத்துக்கு உயிரொலிகள் சேர்க்கப்படுகின்றன. தனியான அடையாளக் குறிகளைச் சேர்ப்பதற்கு எடுத்துக்காட்டாக "கா", "கி" போன்ற எழுத்துக்களையும், மெய்யெழுத்து மாறுதலடைவதற்கு எடுத்துக்காட்டாக "கு" போன்ற எழுத்துக்களையும் கொள்ளலாம். அடையாளக் குறிகளை மெய்யெழுத்துக்களுடன் சேர்க்கும்போது குறியீடுகள் மெய்யெழுத்தைத் தொடர்ந்து எழுதும் திசையிலேயே எழுத்தப்படும் என்பதில்லை. சில வேளைகளில் மெய்யெழுத்துக்கு முன்னாலோ, மேலேயோ அல்லது கீழேயோ உயிரொலிக் குறியீடு வருவது உண்டு. எடுத்துக்காட்டாக "கே", "யூ" போன்ற எழுத்துக்களைக் குறிப்பிடலாம்.

மெய்யொலி தொடர்புபடாத உயிரொலிகளைக் குறிப்பதற்கு அபுகிடா முறையில் இரண்டு வழிகள் கையாளப்படுகின்றன.

  • ஒலியற்ற மெய்யெழுத்து உரிய உயிரெழுத்துக் குறியீடுகளுடன் பயன்படுதல்.
  • மெய்யெழுத்தில் சார்ந்திருக்கக்கூடிய உயிரொலிக் குறியீடுகளிலும் வேறான தனி மெய்யெழுத்துக்கள் பயன்படுதல்.

உயிரொலித் தொடர்பற்ற மெய்யொலிகள் பின்வரும் முறைகளில் ஒன்றால் வெளிப்படுகின்றன.

  • உயிரொலி இல்லாமையைக் காட்டுவதும், மெய்யெழுத்தைச் சார்ந்திருப்பதுமான ஒரு குறியீட்டின் பயன்பாடு.
  • சார்ந்திருக்கும் உயிர்க் குறியீடு எதுவும் இல்லாமை.
  • சார்ந்திருக்கும் ஒலியிலா உயிர்க் குறியீட்டின் பயன்பாடு.
  • இரண்டு மெய்களை இணைக்கும் கூட்டெழுத்துக்களில் முதல் எழுத்து உயிரின்றி ஒலித்தல்.
  • சிறிய சார்ந்திருக்கும் குறியீடு, வேறுபட்ட முறையில் இடப்படும் முழு மெய்யெழுத்து அல்லது தனியான குறியீடு.

வகைகள்

[தொகு]

அபிகுடா எழுத்து முறையில் ஓரளவுக்கு வேறுபாடாகச் செயற்படும் மூன்று வகைகள் உள்ளன.

  • பிராமியக் குடும்பம்: அபிகுடா முறையில் மிகப் பெரியதும், மிகப் பழையதுமான வகை இதுவாகும். தெற்காசியா, தென்கிழக்காசியா ஆகிய பகுதிகளில் புழங்கும் இம் முறையில் உயிரொலிகள் அடையாளக் குறிகளினாலோ, கூட்டெழுத்துக்களினாலோ அல்லது உயிரொலி அகற்றும் குறியீடுகளினாலோ காட்டப்படுகின்றன.
  • எதியோப்பியக் குடும்பம்: இம் முறையில் மெய்யெழுத்துக்களின் வடிவத்தை மாற்றுவதன் மூலம் உயிரொலிகள் குறிக்கப்படுகின்றன. இவற்றில் ஒன்று இறுதி மெய்யையும் குறிக்கப் பயன்படுகின்றது.
  • கிரீ குடும்பம்: மெய்யெழுத்துக்களைச் சுழற்றுவதன் மூலம் அல்லது இடம்-வலமாகவோ மேல்-கீழாகவோ மாற்றுவதன் மூலம் உயிரொலிகள் குறிக்கப்படுகின்றன. இறுதி மெய்கள் சிறப்புக் குறிகளினால் அல்லது மெய்யெழுத்தை உயர்த்தி எழுதுவதன் மூலம் குறிக்கப்படுகின்றன.

காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Février, James Germain (1948). "Le Néosyllabisme". Histoire de l'écriture. Payot. pp. 333–83.
  2. Diringer, David (1948). The Alphabet: A Key to the History of Mankind. Philosophical Library. p. 601 (index).
  3. Householder, F. (1959). Review of The Decipherment of Linear B by John Chadwick, The Classical Journal, 54(8), 379–83. Retrieved 30 September 2020.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அபுகிடா&oldid=4116181" இலிருந்து மீள்விக்கப்பட்டது