அமீபா
அமீபா | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
தொகுதி: | |
வரிசை: | ட்யூபுலினிடா
|
குடும்பம்: | |
பேரினம்: | அமீபா Bory de Saint-Vincent, 1822
|
இனங்கள் | |
அமீபா என்பது மூத்தவிலங்கிகளிலுள்ள ஒரு பேரினம் ஆகும்[1]. அமீபா ஓரணுவுயிர்களின் தொகுதியில் வேக்காலிகள் (Rhizopoda) வகுப்பைச் சேர்ந்ததாகும். உதிர்ந்த மட்கும் இலைகள், குளங்கள் குட்டைகளின் அடித்தளத்தை ஒட்டிய நீர்ப்படிவுகள் போன்ற இடங்களில் அமீபா உயிர்ப்பிக்கிறது. அமீபாவின் கலமானது கருவைக் கொண்டிருக்கும் ஒரு மெய்க்கருவுயிரி ஆகும். இதனை அதிநுண்ணுயிரிகளின் கூட்டத்துள் சேர்க்கலாம்.
மார்ச்சு 1, 2016 அன்று நேச்சர் கம்மியூனிக்கேசன்சு அறிக்கையில், அமீபாவிற்கு மனித இனத்தைப் போன்றே நோயெதிர்ப்பு சத்து உள்ளது என எடுத்துரைக்கிறது. மனிதர்கள் மற்ற உயர் விலங்குகளில் உள்ள தின்குழியங்களைப் (phagocytes) போன்றே இந்த அமீபாக்களின் உடலில் புறவுயிர்மி வலைகள் (extracellular nets) பாக்டீரியா (bacteria) அழிக்கின்றது என அந்த செனீவாப் பல்கலைக்கழக ஆய்வு கூறுகிறது.[2]
வரலாறு
[தொகு]August Johann Rösel von Rosenhof என்பவரால் 1757 இல் முதன் முதலாக இந்த அமீபா கண்டுபிடிக்கப்பட்டது[3]. ஆரம்ப காலங்களில் இயற்கையியல் அறிஞர்கள் இந்த அமீபாவை Proteus animalcule என அழைத்தனர். புரோட்டியசு (Proteus) என்ற பெயர் தனது உருவத்தை மாற்றிக் கொள்ளும் தன்மை கொண்ட கிரேக்க கடவுளின் பெயரைக் கொண்டு உருவானது. அதன் பின்னர் அமீபே (Amibe) என்ற பெயர் Bory de Saint-Vincent என்பவரால் வழங்கப்பட்டது[4]. கிரேக்க மொழியில் amoibè என்பது 'மாற்றம்' என்பதைக் குறிக்கின்றது[5]. Dientamoeba fragili என்ற அமீபா 1918 இல் விபரிக்கப்பட்டு, மனிதருக்கு தீங்கு விளைவிப்பதாக அறியப்பட்டது[6].
உடற்கூற்றியல்
[தொகு] அமீபாவானது பொதுவாக ஒரு கலம் கொண்ட உயிரினம் ஆகும். மற்ற ஓரணுவுயிர்களைப் போலவே அமீபாவின் உடலும் குழியமுதலுரு (Protoplasm) என்னும் உயிர்ப்பொருளால் ஆனது. குழியமுதலுருவில் ஓர் உட்கருவும், அதைச் சுற்றி உயிரணு ஊனீரும் (cytoplasm) காணப்படும். அமீபாவின் உடலில் உயிரணு ஊனீர் மேற்பரப்பில் மெல்லிய சவ்வுப் படலமாக இறுகியிருக்கிறது. இச்சவ்வுப்படலம் சருமம் எனப்படும். சில சமயங்களில் இதனைச் சூழ பிசிர்கள் காணப்படலாம். எனினும் இது அமீபாவின் உடல் வடிவம் மாறிக் கொண்டிருப்பதைத் தடை செய்வதில்லை. உயிரணு ஊனீரில் அதை உருவாக்கும் பொருள்கள் தொடர்ந்து இயங்கிக் கொண்டே இருக்கும். இதன் கலத்தில் சில நுண் உறுப்புக்களும், குழியமுதலுருவும் கலமென்சவ்வினால் சூழப்பட்டிருப்பதுடன், தனது உணவை தின்குழியச் (phagocytosis) செயல்முறை மூலம் பெற்றுக் கொள்ளும். இவ்வாறான தின்குழியமை செயல்முறைக்கு ஏதுவாக அமீபாவில் பல போலிக் கால்கள் காணப்படும். இவை தமது உருவத்தை மாற்றிக் கொள்ளக் கூடியன.
அமீபாக்கள் பொதுவாக வெறும் கண்களால் பார்க்க முடியாதவையாகவும், நுணுக்குக்காட்டியின் உதவியுடன் பார்க்கப்படக் கூடியவையாகவுமே இருக்கும். அமீபாக்களில் மிகவும் அறியப்பட்டிருக்கும் இனமான அமீபா புரோடியசு - Amoeba proteus, அசையும்போது 220-740 μm நீளமுடையதாக இருக்கும்[7]. இதுவே பொதுவாக பெரிய அமீபாவாக அறியப்படுகின்றது[8]. ஆனாலும் சில அமீபாக்கள் மில்லிமீட்டர் நீளம் கொண்டவையாகவும் வெறும் கண்ணால் பார்க்கக் கூடியவையாகவும் இருக்கும்[1].
அமீபாவின் இடப் பெயர்ச்சி
[தொகு]உயிரணு ஊனீர் பெருகி , உடலின் மேற்பரப்பில் ஏதேனும் ஒரு புள்ளியை நோக்கிப் பாயும்போது, அந்த இடம் பிதுங்கும். பிதுக்கத்தால் அமீபாவின் உடலில் நீட்சிகள் ஏற்படும். இந்த நீட்சிகள் போலிக் கால்கள் எனப்படும். போலிக் காலில் உயிரணு ஊனீர்ப்பெருக்கு அதிகரிக்க அதிகரிக்க நீண்டு அகலமாகிக் கொண்டே போகும். அமீபாவின் உடலும் அதற்குள் பெருக்கமடைவது போல் தோன்றும் இந்த முறையில் தான் அமீபா ஓரிடத்தை விட்டு இன்னோரிடத்திற்கு பெயர்ச்சி அடைகிறது.
சில அமீபாக்களுக்கு போலிக்கால்கள் தாவரங்களுக்கு இருப்பது போலத் தோன்றும். இதன் காரணமாக அமீபா இனத்தைச் சேர்ந்த ஓரணுவுயிர்கள் வேர்க்காலிகள் வகுப்பு என அழைக்கப்படுகின்றன. வேர்களை ஒத்த இந்த போலிக்கால்கள் அமீபாவின் எந்தப் பகுதியிலும் தோன்றும். பின் இருந்த சுவடு தெரியாமல் மறைந்து போகும்.
அமீபா உணவு உண்ணும் முறை
[தொகு]அமீபா தனது இரையைப் பிடிக்கும் முறை அலாதியானது. ஓரணு பச்சைநீர்ப்பூண்டு ஏதேனும் எதிர்ப்பட்டால் அமீபாவின் உடலில் இன்னொரு போலிக்கால் உண்டாகும் சில நேரங்களில் நான்கைந்து கால்கள் கூட உருவாகும். போலிக் கால்கள் படிப்படியாக நீர்ப்பூண்டைச் சூழ்ந்து முற்றுகையிடும். பின் அதை நெருக்கிப்பிடித்து, உயிரணு ஊனீருக்குள் இழுத்துச் செல்லும். உயிரணு ஊனீரில் வெளிப்படும் செரிப்புநீர் நீர்ப்பூண்டைச் சூழ்ந்து கொள்ளும் போது சீரணக் குழி ஒன்று உருவாகும். இந்தக் குமிழியில் இரையானது (நீர்ப்பூண்டு) செரிப்பு நீரின் கரை தன்மையால் வினை புரியப்பட்டு நீர்மப் பொருளாக மாற்றப்படுகிறது. பின் செரிக்கப்படுகிறது. செரிக்கப்பட்ட உணவுப்பொருள்கள் அமீபாவின் உடற்பொருளை உருவாக்குகின்றன. அமீபா வாழ , வளர உதவுகின்றன.
செரிக்கப்படாத உணவுப்பகுதி, அமீபாவின், உடலில் எந்தப் பகுதி வழியேயும் அல்லது ஊனீர்ப்பிளவின் வழியே வெளியேற்றப்பட்டு விடும். அதன் பின் இரையை உண்ண உருவாக்கப்பட்ட செரிமானக் குமிழி மறைந்துவிடும்.
அமீபாக்கள் ஓரிரு உயிரணுக் கருவையும், சவ்வூடு பரவல் சமநிலையைப் பேணுவதற்காக எளிமையான புன் வெற்றிடத்தையும், கொண்டிருக்கும். உள்ளெடுக்கப்படும் உணவானது புன் வெற்றிடங்களில் சேமித்து சமிபாடு அடையச் செய்யப்படும்.
அமீபாவின் சுவாசம்
[தொகு]அமீபாவும் சுவாசிக்கிறது. ஆனால் அமீபாவிற்கு சுவாச உறுப்புகள் என ஏதும் தனியே இல்லை. அமீபா உடலின் மேற்பரப்பு முழுவதும் சுவாசித்தலில் பங்கு பெறுகிறது. நீர்ல் கரைந்துள்ள ஆக்சிசனை உள்ளிழுத்து கரியமில வாயுவை வெளியிடுகிறது.
கழிவு நீக்கம்
[தொகு]அமீபாவின் உயிரணு ஊனீரில் ஒளிபுகும் திரவத்துளியைக் கொண்ட வெண்குப்பி ஒன்று இருக்கும். இது கழிவு வெளியேற்றக் குமிழி (Excretory Vacuole) எனப்படும். இது அடிக்கடி மறைந்து மறைந்து மீண்டும் தோற்றமளிக்கக் கூடியது. அவ்வப்போது கழிவு வெளியேற்றம் நிகழும்போது, மிகையான நீரும், கழிவுப் பொருள்களும் கொண்ட நீர்மம் குமிழியில் நிறைந்து காணப்படும். அப்போது குமிழி தோன்றும். கழிவு வெளியேறியதும் குமிழி மறைந்துவிடுகிறது. குமிழியில் உள்ள திரவம் ஒளிக்கதிர்களில் பளிச்சிட்டவாறு வெளியேற்றப்படுகிறது.
அமீபாவின் தன்மைகள்
[தொகு]- அமீபாக்கள் ஒளியைக் கண்டு விலகிச் சென்று நிழலில் ஒதுங்குகின்றன. பிரகாசமான ஒளி அமீபாக்களைக் கொன்றுவிடக்கூடியது. நிழலில் ஒதுங்கும் அமீபாக்கள் தப்பிப் பிழைக்கின்றன.
- உப்புக்கல் ஒன்றை நீர்த்துளியில் போட்டால் அமீபாவின் இயக்கம் குறைகிறது. போலிக்கால்கள் சுருங்கி அமீபாவின் உடல் உருண்டை வடிவம் பெறுகிறது.
- தூண்டல் பொருள்களால் அமீபாவின் குழியமுதலுரு கிளர்ச்சியடைகிறாது.
- அமீபா பிளவு படுவதன் மூலமாக தனது இனத்தைப் பெருக்குகிறது.
- நீர் நிலைகள் வற்றும் போது அமீபாவின் போலிக் கால்கள் சுருங்கி உடல், உருண்டை வடிவம் பெறுகிறது. பின் இறுகிய படலத்தால் மூடப்பட்டு உருண்டையான சவ்வு உறை ஒன்று உருவாகிறது. இவ்வுறை கடுங்குளிரையும் வெப்பத்தையும் தங்கவல்லது.
- சவ்வு உறை காற்றினால் வேறு நீர்நிலைகளுக்கு அடித்துச் செல்லப்படும் போது, உறையை விட்டு வெளியேறும் அமீபா மீண்டும் தன் இயக்கத்தை நிகழ்த்தும்.
அமீபாவின் இனப்பெருக்க முறை
[தொகு]அமீபாவானது, ஏனைய ஒருகல மெய்க்கருவுயிரிகள் போலவே கலவியில்லாத (asexually) முறையிலான இனப்பெருக்க முறையை மேற்கொள்ளும். இங்கு இழையுருப்பிரிவு என்றழைக்கப்படும் கலப்பிரிவு மூலம் கலங்கள் இரட்டிக்கப்பட்டு இனப்பெருக்கம் நடைபெறும். ஏதாவது காரணத்தல் பலவந்தமாக ஒரு அமீபாவானது இரண்டாகப் பிரிக்கப்படுமாயின், கருவைக் கொண்ட பகுதி, புதிய குழியவுருவைக் கொண்டு புதிய கலமாக விருத்தியடைய, கருவற்ற பகுதி இறந்துவிடும். அமீபாக் கலங்கள் திடவட்டமான உருவம் அற்றவை.[9].
அமீபாவால் உருவாகும் நோய்
[தொகு]அமீபாக்களில் சாதாரண அமீபா, சீதபேதி அமீபா (எண்டமீபா) என வகைகள் உள்ளன. சீத பேதி அமீபாவால் மனிதர்களுக்கு மிகக் கடுமையான நோயான சீதபேதி உண்டாகிறது.
சுற்றுப்புறம் தூய்மையாகவும் சுகாதாரமாகவும் இருந்தால் சீத பேதி அமீபாக்களை ஒழிக்க முடியும். இவை நீரின் கொதிநிலையில் மடிந்து விடக் கூடியவை. எனவே, நன்கு கொதிக்கவைத்த நீரையும், வேக வைத்த அல்லது பொரித்த உணவு வகைகளையும் உண்பதன் மூலம் நாம் சீதபேதி அமீபாவின் பாதிப்பிலிருந்து தப்பிக்க முடியும்.
மரபகராதி
[தொகு]அமீபா ஒரு நுண்ணுயிரியாக இருந்த போதிலும், பெரிய மரபகராதியைக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்க ஒரு இயல்பாகும். Amoeba proteus ஆனது 290 பில்லியன் இணைதாங்கிகளையும் (base pairs), Amoeba dubia என முன்னர் அழைக்கப்பட்ட Polychaos dubium, 670 பில்லியன் இணைதாங்கிகளையும் கொண்டவையாகும். மனித மரபகராதித் திட்டம் மூலம், மனித மரபகராதியில் கிட்டத்தட்ட 3 பில்லியனுக்கு மேற்பட்ட இணைதாங்கிகள் மட்டுமே இருப்பது தெரியவந்துள்ளது.[10] [11]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ டோர்லாண்ட் மருத்தவ அகராதியில் Amoeba
- ↑ Amoebae Have Human-Like Immunity
- ↑ Leidy, Joseph (1878). "Amoeba proteus". The American Naturalist 12 (4): 235–238. doi:10.1086/272082. https://archive.org/details/sim_american-naturalist_1878-04_12_4/page/235. பார்த்த நாள்: 2007-06-20.
- ↑ Audouin, Jean-Victor (1826). Dictionnaire classique d'histoire naturelle. Rey et Gravier. p. 5.
{{cite book}}
: Unknown parameter|coauthors=
ignored (help) - ↑ McGrath, Kimberley (2001). Gale Encyclopedia of Science Vol. 1: Aardvark-Catalyst (2nd ed.). Gale Group. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7876-4370-X. இணையக் கணினி நூலக மைய எண் 46337140.
{{cite book}}
: Unknown parameter|coauthors=
ignored (help) - ↑ Eugene H. Johnson, Jeffrey J. Windsor, and C. Graham Clark Emerging from Obscurity: Biological, Clinical, and Diagnostic Aspects of Dientamoeba fragilis.
- ↑ "Amoeba proteus". Amoebae on the Web. Archived from the original on 2009-04-13. பார்க்கப்பட்ட நாள் 2009-10-08.
- ↑ MacIver, Sutherland. "Isolation of Amoebae". The Amoebae. பார்க்கப்பட்ட நாள் 2009-10-08.
- ↑ "Amoeba". Scienceclarified.com.
- ↑ http://www.genomenewsnetwork.org/articles/02_01/Sizing_genomes.shtml
- ↑ International Human Genome Sequencing Consortium (2004). "Finishing the euchromatic sequence of the human genome". Nature 431 (7011): 931–45. doi:10.1038/nature03001. பப்மெட்:15496913.