உள்ளடக்கத்துக்குச் செல்

வெள்ளம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
1634, அக்டோபர் 11-12 இரவு ஜெர்மனியில் வடகடல் வெள்ளம் தாக்கியதன் சமகாலத்து ஓவியம்

வெள்ளம் என்பது நிலத்தை மூழ்கடிக்குமளவுக்குத் தேங்கி நிற்கும் அல்லது பொங்கிப் பாய்ந்தோடும் நீர் ஆகும்.[1]

ஆறு அல்லது ஏரி போன்ற நீர்நிலைகளில் உள்ள நீர் மிகையாகும் போது அல்லது கரை உடையும் போது அது தனது வழக்கமான எல்லைகளைத் தாண்டுகிறது.[2] நீரோட்டத்தின் வலிமையானது மிகவும் அதிகரிக்கின்ற போது ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்படும். அது ஆற்றின் பாதையைத் தாண்டி பெருக்கெடுத்து ஓடி கரையோரம் ஒட்டி அமைந்துள்ள வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு சேதம் உண்டாக்குகிறது.

நீர் நிலைகள் மற்றும் ஆறுகளில் இருந்து மிகவும் தொலைதூரத்தில் சென்று குடியிருப்பதன் மூலம் வெள்ளத்தால் ஏற்படும் சேதங்களை தவிர்த்து விடலாம் என்றாலும் வாழ்க்கைக்குரிய ஆதாரத்தைப் பெறுவதற்கும் பயணம் மற்றும் வர்த்தக வசதிகளின் காரணமாகவும் பன்னெடுங் காலம் தொட்டே மக்கள் நீர்நிலைகளின் அருகிலேயே குடியிருந்து வருகிறார்கள்.

வெள்ளத்தின் முக்கிய வகைகள்

[தொகு]
ஆஸ்திரேலியாவின் வடபிரதேசத்தில் உள்ள டார்வின் பகுதியில் பருவ கன மழையால் ஏற்பட்ட கடல்கூம்பு வெள்ளப்பெருக்கு.
ஐக்கிய அமெரிக்காவின் புளோரிடாவில் வீசிய வில்மா சூறாவளியின் தாக்கத்தால் ஏற்பட்ட புயல்மழை பொங்கு வெள்ளம், அக்டோபர் 2005.
இடிமழைப் புயலால் ஏற்பட்ட திடீர் வெள்ளம்.

ஆற்று மருங்கின் வெள்ளங்கள்

[தொகு]
  • மெதுவான வகை: தொடர்ச்சியாகப் பெய்யும் மழை அல்லது பனிஉருகுதல் வேகம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக இது உண்டாகும். பருவக் காற்றினால் உண்டாகும் கனமழை, புயல் மற்றும் காற்றழுத்தங்கள் மற்றும் பனிப்படிவுகளை உருகச் செய்யும் வெப்பமழை ஆகியவை இதற்கான காரணங்களில் சில. எதிர்பாராத தடங்கல்களான நிலச்சரிவு, பனிப்பாறைகள் அல்லது இடிபாடுகள் போன்றவை வெள்ளத்தின் போக்கை மந்தப்படுத்தும்.
  • விரைவு வகை/உடனடி வகை: திடீர்வெள்ளங்கள். இடியுடன் கூடிய பெருமழை அல்லது நீர்த்தேக்கங்களில் கரைகள் உடைவது, நிலச்சரிவு மற்றும் பனியாறு ஆகியவை இதற்கான காரணங்களாகும்.

கழிமுக வெள்ளங்கள்

[தொகு]

பொதுவாக புயலால் உண்டாகும் கடல் அலை பொங்குநிலை மற்றும் அழுத்தப் புயல்காற்றால் கழிமுக வெள்ளங்கள் (Estuarine floods) உண்டாகின்றன. அயனப்புயல் அல்லது கூடுதல் அயனப்புயலில் (extratropical cyclone) இருந்து உருவாகும் தீவிரப்புயலும் (storm surge) இந்த அட்டவணையில் அடங்கும்.

கடற்கரையோர வெள்ளங்கள்

[தொகு]

கடுமையான கடற்புயல் அல்லது வேறு இயற்கைச் சீற்றங்கள் (உதாரணம்: சுனாமி அல்லது சூறாவளி) காரணமாக இவை உருவாகின்றன. அயனப்புயல் அல்லது அதிவெப்பப் புயலில் இருந்து உருவாகும் தீவிரப்புயலும் இதில் அடங்கும்.

பேரழிவு வெள்ளங்கள்

[தொகு]

அணை உடைப்பு போன்ற எதிர்பாராத நிகழ்வுகள் அல்லது வேறு இயற்கைச் சீற்றத்தின் (உதாரணம்: நிலநடுக்கம் மற்றும் எரிமலை சீற்றம்) விளைவாக உண்டாகும் பேரழிவுகள் காரணமாக பேரழிவு வெள்ளங்கள் (Catastrophic floods) ஏற்படுகின்றன.

சேற்று வெள்ளங்கள்

[தொகு]

விவசாய நிலத்திலிருந்து வழிந்தோடும் மிகையான நீரால் இத்தகைய சேற்று வெள்ளங்கள் (muddy floods) உருவாகின்றன. விவசாய நிலங்களில் (வடிகால் இல்லாமல்) தேங்கும் மிகையான நீர் மண்ணை அரித்து சேற்று வெள்ளமாக உருவாகிறது. பிறகு நீரோட்டத்தால் வண்டல் படிவுகள் பிரிக்கப்பட்டு அடிமட்டத்திலேயே அடித்துச் செல்லப்படுகின்றன. மக்கள் வசிக்கும் பகுதிகளை அடையும் போதுதான் இந்த சேற்று வெள்ளங்கள் பெரும்பாலும் கண்டுபிடிக்கப்படும். ஆகையினால், சேற்று வெள்ளங்களையும் மொத்த சேற்று குன்றுச்சரிவு படிவுகளின் இடப்பெயர்ச்சியால் நிகழும் சேற்று பாய்ச்சலையும் குழப்பிக் கொள்ளாமல் தவிர்க்க வேண்டும்.

இதர வகைகள்

[தொகு]
  • தண்ணீர் புகாத நிலப்பரப்பில் நீர்தேங்கி (உதாரணம்: மழை நீர்) அது விரைவாக வெளியேற முடியாத நிலையில் வெள்ளம் ஏற்படுகிறது.
  • ஒரே இடத்தை புயல்கள் தொடர்ச்சியாக மையம் கொண்டிருப்பதால் உண்டாகும் வெள்ளம்.
  • அணைக்குக் கீழான தாழ்வான நகர்ப்புற மற்றும் ஊரகப் பகுதிகளை வெள்ளம் மூழ்கடித்து கடும்சேதத்தை ஏற்படுத்தும்.

விளைவுகள்

[தொகு]

ஆரம்பகட்ட விளைவுகள்

[தொகு]
  • கண்டுணரக் கூடிய சேதம்- பாலங்கள், தானுந்துகள், கட்டிடங்கள், கழிவுநீர் அமைப்புகள், சாலைகள், கால்வாய்கள் மற்றும் அனைத்து வகையான கட்டமைப்புகள் சேதமுறும்.
  • உயிர்ச்சேதங்கள் - மக்கள் மற்றும் வளர்ப்புப்பிராணிகள் நீரில் மூழ்கி இறக்க நேரிடும். தொற்றுநோய்களையும், நீரால் பரவும் நோய்களையும் ஏற்படுத்திவிடும்.

இரண்டாம் கட்ட விளைவுகள்

[தொகு]
  • குடிநீர் விநியோகம் - நீர் மாசடையும். தூய்மையான குடிநீர் அரிதாகிப் போகும்.
  • நோய்கள் - சுகாதாரமற்ற நிலை. நீரால் பரவும் நோய்களின் பாதிப்பு.(சுகாதார சீர்கேடுகள்)
  • பயிர்கள் மற்றும் உணவு விநியோகம் - அறுவடை முழுவதும் சேதமாகி உணவு தானிய பற்றாக்குறை ஏற்படும்[3]. ஆனாலும், ஆறுகளின் அருகில் உள்ள தாழ்வுநிலங்கள் ஊட்டச்சத்திற்கு வெள்ளத்தால் ஏற்படும் வண்டல் மண்படிவுகளை சார்ந்திருக்கின்றன.
  • மரங்கள் - நன்கு தாக்குப் பிடிக்கும் தன்மையற்ற இனங்கள் மூச்சுத் திணறலால் இறந்து போய்விடக் கூடும்.[4]

மூன்றாம் கட்ட/நீண்ட கால விளைவுகள்

[தொகு]
  • பொருளாதாரம் - சுற்றுலாத் துறையில் தற்காலிக வீழ்ச்சி, மறுசீரமைப்புக்கான செலவுகள், உணவுப் பற்றாக்குறை ஏற்படுத்தும் விலைவாசி உயர்வு, இவை காரணமாக பொருளாதார நெருக்கடி ஏற்படும்.

வெள்ளக் கட்டுப்பாடு

[தொகு]
அளிகண்டி (ஸ்பெயின்), 1997.

உலகில் பல நாடுகளில் உள்ள வெள்ளப் பெருக்கெடுக்கும் ஆறுகள் எப்போதும் வெகுகவனமாக பராமரிக்கப்படுகின்றன. கரை உடைத்துக் கொள்ளாமல் இருக்க மதகுகள்,[5] தடுப்புகள்,நீர்த்தேக்கங்கள், மற்றும் வாரணை போன்ற அரண்கள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த அரண்கள் தவறும்போது அவசரகால பயன்பாட்டிற்கென மணல் மூட்டைகள் மற்றும் காற்று ஊதப்பட்ட குழாய்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஐரோப்பா மற்றும் அமெரிக்க நாடுகள் கரையோர அரண்களான கடற்கரைச் சுவர்கள் எழுப்பியும், கடற்கரையை உயர்த்திப் பேணியும், தடுப்புத் தீவுகள் அமைத்தும் கடலோர வெள்ளப் பிரச்சினைக்கு தீர்வு கண்டுள்ளன.

ஐரோப்பா

[தொகு]

இலண்டன் மாநகரமானது தேம்சு ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட மாபெரும் எந்திர தடுப்பு அரண்கள் மூலமாக வெள்ளப் பெருக்கில் இருந்து பாதுகாக்கப்பட்டுள்ளது. நீர்மட்டம் குறிப்பிட்ட உயரத்தை எட்டும்போது, இந்தத் தடுப்புக் கதவுகள் மேலே உயர்த்தப்படும். (பார்க்க: தேம்சு தடுப்பு அரண்கள்).

வெனிஸ் நகரமும் இது போன்ற முன்னேற்பாட்டை செய்துள்ளது என்ற போதிலும் அதனால் மிக உயர்ந்த அலைகளைச் சமாளிக்க முடிவதில்லை. கடல்மட்டம் மேலும் மேலும் உயர்ந்து விடுமானால் இலண்டன் மற்றும் வெனிசில் உள்ள தடுப்பு அரண்கள் பயனற்றவையாகி விடும்.

2002 ஆம் ஆண்டின் ஐரோப்பிய வெள்ளங்களில் செக் குடியரசின் பெரௌங்க ஆற்றுக் கரை உடைந்ததில் வீடுகள் மூழ்கியுள்ளன.

மிகப் பெரியதும் மிகப் பரந்ததுமான கழிமுக வெள்ளத் தடுப்புகளை நெதர்லாந்தில் காணலாம். ஊச்டேர்ச்செல்டே அணை (Oosterschelde) அந்நாட்டின் மணிமகுட சாதனை ஆகும். 1953 ஆம் ஆண்டில் நெதர்லாந்தின் தென்மேற்குப் பகுதியில் ஏற்பட்ட வடக்கு கடல் வெள்ளத்தின் காரணமாக டெல்டா வொர்க்ஸ் கழிமுகப் பணிகள் என்றழைக்கப்படும் இந்த வெள்ளத் தடுப்புகள் அமைக்கப்பட்டன. டச்சு நாடு முன்பே வடக்கு பகுதியில் உலகின் மிகப் பெரிய அணைகளில் ஒன்றான அப்ஸ்லுஇத்ஜ்க் (Afsluitdijk) (1932 ஆம் ஆண்டில் மூடப்பட்டது) என்ற அணையைக் கட்டியது.

ரஷ்யாவில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரை மழை வெள்ளச் சீற்றங்களில் இருந்து காக்க 2008 ஆம் ஆண்டில் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் வெள்ளத் தடுப்பு வசதிவளாகம் அமைக்கப்பட்டுள்ளது. 25.4 கிமீ பரப்பில் மொத்தம் 11 அணைகள், நீர் மட்டத்தில் இருந்து 8 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளன.

ஆஸ்திரியாவில் வியன்னா டான்யூப் ஏற்பாட்டின் படி மேற்கொண்ட பல நடவடிக்கைகளால் கடந்த 150 ஆண்டுகளாக வெள்ளம் கட்டுப்பாட்டுக்குள் வைக்கப்பட்டிருக்கிறது.

அமெரிக்கா

[தொகு]
பிட்ஸ்பர்க்ஸ் வெள்ளம் 1936

மேலும் ஒரு விரிவான வெள்ளத் தடுப்பு அரண்கள் அமைப்பை கனடாவின் மனிடோபா மாகாணத்தில் காணலாம். 1950 ஆம் ஆண்டு இளவேனில் காலத்தின் போது வின்னிபெக்கில் பேரழிவு வெள்ளம் ஏற்பட்டது. எதிர்காலத்தில் நகரை வெள்ளத்தில் இருந்து பாதுகாக்க மனிடோபா அரசாங்கம், நீரைத் திருப்பிவிடும் கால்வாய்கள், கடல் மதில் சுவர்கள், வடிகால்கள் ஆகியவை கொண்ட மிகப்பெரும் செயல்திட்டத்தை மேற்கொண்டது. இந்த திட்டம் 1997 ஆம் ஆண்டில் கரைபுரண்டு வந்த வெள்ளத்திலிருந்து வின்னிபெக் நகரை காப்பாற்றியது. ஆனால் அதற்கு மாறாக, வின்னிபெக்கின் அருகில் அமைந்துள்ள கிராண்ட் போர்க்ஸ், வடக்கு டகோடா மற்றும் செயின்ட் அகாத்தே மனிடோபா போன்ற பகுதிகளில் கடும்சேதத்தை விளைவித்தது.

ஐக்கிய அமெரிக்க நாடுகளில் உள்ள நியூஆர்லியன்ஸ் பெருநகரப் பிரதேசத்தின் 35% பகுதி கடல்மட்டத்தில் இருந்து தாழ்வாக அமைந்துள்ளது. இப்பகுதியில் உள்ள நூற்றுக்கணக்கான மைல் பரப்பளவு வெள்ளத் தடுப்பு வாயில்கள் மற்றும் மதகுகள் மூலம் பாதுகாக்கப்பட்டுள்ளது.

காத்ரினா புயலின் போது இந்த அமைப்பு பல இடங்களில் செயலிழந்து மிகவும் பேரழிவை உண்டாக்கியது. சுமார் 50% பிரதேசத்தை வெள்ளம் சூழ்ந்தது. கடலோரப் பகுதிகளில், சில சென்டிமீட்டர் முதல் 8.2 மீட்டர் (சுமார் 27 அடி) உயரத்திற்கு வெள்ளம் சூழ்ந்தது.[6] ஐக்கிய அமெரிக்க நாடுகளின் நடுவண் அரசாங்கம் வெள்ளத் தடுப்பை வெற்றிகரமாக கையாள்வதற்காக வெள்ள அபாயம் மிகுந்த நிலச் சொத்துக்களை வாங்க முன்வந்தது.[7]

ஆசியா

[தொகு]

சீனாவில் வெள்ள மாற்றுவழிகள்யாவும் கிராமப்புறங்களில் கவனமுடன் செய்யப்படுகின்றன. நகரங்கள் அனைத்தையும் நெருக்கடிகளில் இருந்து காத்திடவே அவ்விதம் செய்யப்படுகிறது.[8]

காடு அழிப்பு வெள்ள அபாயத்தை அதிகரிக்கும் என அறிஞர்கள் கூறுகின்றனர். இயற்கையான காடுகள் பரவி இருந்தால் தான் வெள்ளப்பெருக்கின் கால அளவை குறைக்க ஏதுவாகும். அதனால் அடர்ந்து செறிந்த காடுகள் அழியாவண்ணம் இருந்தால் வெள்ள நிகழ்வுகளையும் அவற்றின் கடுமையையும் குறைக்க முடியும்.[9]

ஆப்பிரிக்கா

[தொகு]

எகிப்தில் அஸ்வான் அணை (1902) மற்றும் அஸ்வான் உயர் அணை (1976) கட்டப்பட்டதால் நைல்ஆற்றின் வெள்ளப் பெருக்கு பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டது.

வெள்ளத் துப்புரவு பாதுகாப்பு

[தொகு]

வெள்ள காலத்தில் துப்புரவுப் பணிகளைச் செய்யும் ஊழியர்கள் மற்றும் தன்னார்வலர்களை பல பிரச்சினைகள் எதிர்கொள்கின்றன. கழிவுநீர்க் கால்வாய்களில் இருந்து வழிந்து வரும் துர்நாற்றம் மிகுந்த தண்ணீரை அவர்கள் எதிர்கொள்ள வேண்டியுள்ளது. மேலும் மின்சார ஆபத்துகள், கார்பன் மோனாக்சைடு வெளிப்படல், தசைநார் எலும்புக் கூடு பாதிக்கும் ஆபத்துகள், வெப்பம் அல்லது தட்பம் சார்ந்த அழுத்தங்கள், வாகனம் தொடர்பான ஆபத்துகள், தீ, நீரினில் மூழ்குதல், ஆபத்து விளைவிக்கும் பொருட்கள் எதிர்ப்படல் ஆகியவையும் இத்தகைய ஆபத்துகளில் அடங்குபவை. இவை மட்டுமன்றி வெள்ளப் பேரிடர் நடக்கும் இடங்கள் உறுதியற்று [10] ஊழியர்கள் இடிபாடுகளில் சிக்கிக் கொள்ளவும் நேரிடுகின்றனர். இன்னும் வெள்ள நீரினில் மண்டிக்கிடக்கும் அழுகிப்போன தாவரங்களினால் ஏற்படும் ஆபத்துகளை எதிர்கொள்ளுகின்றனர். சமயத்தில் மின்கம்பிகளாலும் அவர்களுக்கு தீங்கு நேர்கின்றது. விலங்குகள் மற்றும் மனித கழிவுகளாலும் நிறைய ஆபத்துகள் ஏற்படுகின்றன. இத்தகைய ஆபத்துக்களைத் தவிர்ப்பதற்காக வெள்ளப் பேரிடர்களை சமாளிக்கத் திட்டமிடும் மேலாளர்கள் வேலை செய்கின்றவர்களுக்கென கெட்டியான தொப்பிகள், பாதுகாப்புக் கண்ணாடிகள், கடின வேலைக்கு உரிய கையுறைகள், நீரில் மிதக்க வைக்கும் சட்டைகள், நீர்ப்புகாத மிதியடிகள் கொண்ட எஃகுப்பாதம் மற்றும் உட்புறங்கள் ஆகிய பொருட்களை வழங்குகின்றனர்.[11]

வெள்ளத்தால் உண்டாகும் பயன்கள்

[தொகு]

வெள்ளங்களால் நன்மைகளும் உருவாகின்றன. மண்வளம் செழுமை பெறுகின்றது. ஊட்டச்சத்து கூடுகின்றது. முந்தைய காலத்தில் யூப்ரடிஸ் டைகிரிஸ் ஆறுகள், நைல் ஆறு, சிந்து ஆறு, கங்கை ஆறு, மஞ்சள் ஆறு போன்ற ஆறுகளில் தவறாமல் வெள்ளப்பெருக்கு நிகழ்வது பழங்கால சமுதாயங்கள் பயன்பெறுவதாகவே அமைந்து இருந்தது. வெள்ளம் பெருக்கெடுக்கும் பிரதேசங்களில் நீர்மின்சாரம் போன்ற புதுப்பிக்கத்தக்க ஆதாரங்களில் இருந்தான எரிசக்தியை பெறக்கூடிய வாய்ப்புகள் அதிகம் உள்ளன.

வெள்ள மாதிரி

[தொகு]

வெள்ள மாதிரி என்பது சமீபகாலத்து நடைமுறையாக இருந்தாலும் வெள்ளம் பரவும் சமவெளிகளில் அதனை நிர்வகிப்பது குறித்த முயற்சிகள் கிட்டத்தட்ட ஆறாயிரம் ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்டுத்தான் வருகின்றன.[12] வெள்ள மாதிரி கணினிமயமாக்கப்பட்டு உள்ளதை சமீப காலத்திய வளர்ச்சியாகக் குறிப்பிடலாம். அதனால் பொறியியல் வல்லுனர்கள் இதுகாறும் கடைப்பிடித்து வந்த, முயற்சிசெய்த மற்றும் சோதனை செய்த "தாங்கிப்பிடி அல்லது தடுத்து நிறுத்து" என்ற அணுகுமுறையில் இருந்து விலகி, பொறியியல் கட்டுமானங்களை மேம்படுத்தும் போக்கை ஊக்குவித்து வருகின்றனர். அண்மை வருடங்களில் தான் பல்வேறு கணினிமய மாதிரிகள் அபிவிருத்தி கண்டுள்ளன.[13][14][15]

அதி பயங்கர வெள்ளங்கள்

[தொகு]

பின்வரும் பட்டியலில் உலகெங்கும் நிகழ்ந்த அதிபயங்கர வெள்ளங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

உயிர்ப் பலி எண்ணிக்கை

நிகழ்வு இடம் தேதி :
2,500,000–3,700,000[16] 1931 சீனா வெள்ளம் சீனா 1931
900,000–2,000,000 1887 ஆம் ஆண்டின் மஞ்சள் ஆற்று வெள்ளம் சீனா 1887
500,000–700,000 1938 மஞ்சள் ஆறு வெள்ளம் சீனா 1938
231,000 நினா புயலின் விளைவாக பாப்கியாயோ அணை உடைந்தது. சுமார் 86,000 பேர்

வெள்ளத்தால் மடிந்தனர். மற்றுமொரு எண்ணிக்கைப்படி 145,000 பேர் பின்வந்த நோய்நொடியால் மாண்டனர்.

சீனா 1975
230,000 இந்தியப் பெருங்கடல் ஆழிப்பேரலை இந்தோனேசியா, இந்தியாவின் பல பகுதிகள் மற்றும் தமிழ்நாடு, தாய்லாந்து, மாலத்தீவுகள் 2004
145,000 1935 மஞ்சள் ஆறு வெள்ளம் சீனா 1935
100,000க்கும் அதிகமானோர் செயின்ட் பெலிக்ஸ் வெள்ளம் நெதர்லாந்து 1530
100,000 ஹனோய் சிவப்பு ஆற்று கழிமுக வெள்ளம் வடக்கு வியட்னாம் 1971
100,000 1911 மஞ்சள் ஆறு (ஹுவாங் ஹ) வெள்ளம் சீனா 1911
வங்காளதேச வடமேற்குப் பகுதியில் மழையால் ஆற்றங்கரை பொங்கி வழிந்தது. ஏராளமான கிராமங்கள் மூழ்கின. செயற்கைக் கோள் படம். அக்டோபர் 2005.

குறிப்புகள்

[தொகு]

விபரத்தொகுப்பு

[தொகு]
  • O'Connor, Jim E. and John E. Costa. 2004உலகின் மிகப்பெரும் வெள்ளங்கள் நேற்றும் இன்றும்:அதன் காரணங்களும் அளவுகளும் [சுற்றறிக்கை 1254]. வாஷிங்டன் , டி.சி.: அமெரிக்க உள்துறை இலாகா , அமெரிக்க மண்ணியல் துறைக் கணக்கெடுப்பு.
  • Thompson, M.T. (1964). நியு இங்கிலாந்து வரலாற்று வெள்ளங்கள் 1779-M].மண்ணியல் துறைக் கணக்கெடுப்பு.-வாஷிங்டன் , D.C.:அமெரிக்க ஐக்கிய நாடுகள் அரசாங்க அச்சக அலுவலகம்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. MSN Encarta அகராதி . வெள்ளம் பரணிடப்பட்டது 2011-02-04 at the வந்தவழி இயந்திரம் 2006-12-28 அன்று கொள்ளப்பட்டது.
  2. வானியல் ஆராய்ச்சி அரும்பதவிளக்கம்.(2009). வெள்ளம் பரணிடப்பட்டது 2007-08-24 at the வந்தவழி இயந்திரம் மீட்கப்பட்ட நாள் 2009-01-09.
  3. "Southasianfloods.org". Archived from the original on 2017-09-06. பார்க்கப்பட்ட நாள் 2021-08-13.
  4. "வெள்ளங்கள் அதன் விளைவுகளும் மரங்கள் மேல்". Archived from the original on 2016-06-14. பார்க்கப்பட்ட நாள் 2009-08-21.
  5. Henry Petroski (2006), Levees and Other Raised Ground, vol. 94, American Scientist, pp. pp. 7–11 {{citation}}: |pages= has extra text (help)
  6. United States Department of Commerce (2006). "Hurricane Katrina Service Assessment Report" (PDF). Archived from the original (PDF) on 2006-07-23. பார்க்கப்பட்ட நாள் 2006-07-14. {{cite web}}: Unknown parameter |month= ignored (|date= suggested) (help)
  7. வெள்ளங்கள், கடற்சூறாவளிகள், சூறைக்காற்றுகள் நிலநடுக்கங்கள் ... பரணிடப்பட்டது 2006-08-24 at the வந்தவழி இயந்திரம்நாம் ஏன் தயாரிப்பு செய்து கொள்ளக் கூடாது?." பரணிடப்பட்டது 2006-08-24 at the வந்தவழி இயந்திரம் டைம் ஆகஸ்ட் 28, 2006.
  8. "வெள்ளத்தின் போக்கை மாற்றவேண்டி ஏழாவது கடல் மதில் சுவரை சீனா இடித்துத் தள்ளியது." சீனா டெய்லி . 2003-07-07.
  9. Bradshaw CJ, Sodhi NS, Peh SH, Brook BW. (2007 உலகளாவிய சாட்சியம். காடுகள் அழிப்பு வெள்ள இடரை அதன் கடுமையை வளர்முக நாடுகளில் அதிகம் முடுக்கி உள்ளது.Global Change Biology , 13: 2379-2395.
  10. {0/அமெரிக்க ஐக்கிய நாடுகள் தேசிய நிறுவனம் வாழ்க்கைதொழில் பாதுகாப்பு புயல் மற்றும் வெள்ளம் துப்புரவு . மதிப்பீடு 09/23/2008.
  11. NIOSH. ''NIOSH எச்சரிக்கை அபாயங்கள் துப்புரவு பணி. NIOSH வெளியீடு No. 94-123.
  12. Dyhouse, G. et al. "வெள்ள மாதிரி பயன்பாடு HEC-RAS (முதல் பதிப்பு)." Haestad Press, Waterbury (USA), 2003.
  13. அமெரிக்க படைப் பிரிவு பொறியியலாளர்கள் Davis, CA. Hydrologic Engineering Center. பரணிடப்பட்டது 2013-03-08 at the வந்தவழி இயந்திரம்
  14. BMT WBM Ltd. Spring Hill, Queensland. "TUFLOW வெள்ளம் மற்றும் அலை ஊக்குவிக்கும் மென்பொருள் ."
  15. Cabinet Office, UK. " பரணிடப்பட்டது 2010-08-07 at the UK Government Web ArchivePitt Review: பாடங்கள் கற்றுக்கொண்டது. 2007 வெள்ளங்கள்." பரணிடப்பட்டது 2010-08-07 at the UK Government Web Archive ஜூன் 2008.
  16. வரலாற்றில் மிகமோசமான இயற்கைப் பேரிடர்கள் பரணிடப்பட்டது 2008-04-21 at the வந்தவழி இயந்திரம்

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=வெள்ளம்&oldid=3843888" இலிருந்து மீள்விக்கப்பட்டது