உள்ளடக்கத்துக்குச் செல்

இடக்கை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இடக்கை வாசித்தல்

இடக்கை (ஒலிப்பு) என்பது கேரளாவின் பாரம்பரிய இசைக்கருவிகளில் ஒன்று. இக்கருவி ஒரு தோல் வாத்தியம் என்றாலும் கேரள இசையில் இது தாள வாத்தியமாக மட்டும் அல்லாமல் சுருதிக்காகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.[1][2][3]

பிற வாத்தியங்களுக்கு இடையே வாசிக்க பயன்படுத்தப்படுவதால் தான் இதற்கு இடக்கை என்று பெயர் சூட்டப்பட்டதாக கருதப்படுகிறது. கேரளாவில் பொதுவாக மாரார், பொதுவாள் போன்ற இனத்தார் இடக்கை வித்வான்களாக உள்ளனர். கோவில்களின் மூலஸ்தானத்தில் அல்லது கர்ப கிருகத்தில் பயன்படுத்தப்படும் அபூர்வமான இசைக்கருவிகளில் ஒன்று இடக்கை. இயக்கப்படாத காலத்தில் இக்கருவியை கருவறையின் முன்பகுதியல் தொங்கவிடப்பட வேண்டும் என்பது ஒரு நியதி ஆகும்.

அமைப்பு

[தொகு]

இடக்கை உடுக்கையை ஒத்தது. அதைவிட சற்று பெரிய அளவிலானதாக இருக்கும். இது பொதுவாக எட்டு அல்லது எட்டரை அங்குலம் நீளமுள்ளதாக இருக்கும். ரத்த சந்தனம், வரிக்கை பலா மரம் போன்ற மரங்களை பயன்படுத்தி இடக்கை தயாரிக்கப்படுகிறது. இக்கருவியின் நடுப்புறத்தைவிட, பக்கவாட்டில் உள்ள வளைய முகங்களின் விட்டம் அதிகமாக இருக்கும். இதன் விட்டம் நான்கு முதல் நான்கை அங்குலம் வரை இருக்கும். இதன் இரு வட்டப் பக்கங்களும் மாட்டுத் தோலால் முடப்பட்டிருக்கும். இடக்கையின் நடுப்பகுதியில் கட்டப்பட்டுள்ள கயிற்றை கையால் அழுத்தி, சிறிய வளைந்த கம்புகளை பயன்படுத்தி ஒலியை கட்டுப்படுத்தலாம். இடக்கை மீது கம்பளத்தாலான அறுபத்தி நான்கு நூல் உருண்டைகள் உள்ளன. இவை அறுபத்தி நான்கு கலைகளைக் குறிக்கும். இடக்கையின் இரு முகங்களில் ஒன்று ஜீவாத்மாவையும், ஒன்று பரமாத்மாவையும் குறிக்கும். வளையத்தில் உள்ள ஆறு ஓட்டைகள் ஆறு வேதங்களை குறிக்கிறது என்ற நம்பிக்கை உள்ளது.

இடக்கையை தோளில் தொங்கவிட்டு இசைப்பர். இதை கூடியாட்டம், கதகளி, மோகினி ஆட்டம், கிருஷ்ணன் ஆட்டம் போன்ற நிகழ்த்துக் கலைகளில் இசைக்கபடுகிறது. இடக்கையை வலக் கையால் அடிப்பர். கதகளி ஆட்டத்தில் பெண் கதாபாத்திரம் வரும்போது இடகையை மட்டும் அடிப்பர், செண்டை இசைக்கப்படாது.

வரலாறு

[தொகு]

இடக்கை பழந்தமிழகத்தின் இசைக்கருவி என்கிறார் ஆய்வாளர் எஸ். எஸ். இராசகோபாலன். சிலப்பதிகாரத்தின் அரங்கேற்றுக் காதையில் வரும் குயிலுவ மக்கள் (130ஆவது வரி) என்பவர்களைப் பற்றி உரையாசிரியர் அடியார்க்கு நல்லார் குறிப்பிடும்போது, அவர்கள் இடக்கா முதலிய இசைக் கருவிகளை இசைப்பவர்கள் என்று குறிப்பிடுகிறார். மேலும் இதே காதையில் குறிப்பிடப்படும் ஆமந்திகை ( 143ஆம் வரி) என்ற இசைக்கருவிக்கு இடக்கை எனும் பொருள் கூறுகிறார்.[4]

இவற்றையும் பார்க்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Deva, Bigamudre Chaitanya (1995). Indian Music (in ஆங்கிலம்). Taylor & Francis. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788122407303.
  2. "EDAKKA". INDIAN CULTURE (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-08-17.
  3. Kalpadruma, Sanskrit dictionary
  4. "செண்டையும் திமிலையும் தமிழ்க் கருவிகளே!". Hindu Tamil Thisai. 2023-05-14. பார்க்கப்பட்ட நாள் 2023-05-18.
தொகு தமிழிசைக் கருவிகள்
தோல் கருவிகள் ஆகுளி | உறுமி | தவில் | பறை | மிருதங்கம் | மத்தளம் | பெரும்பறை | பஞ்சறை மேளம் | முரசு | தமுக்கு | பேரிகை | பம்பை | மண்மேளம் | கஞ்சிரா | ஐம்முக முழவம் | கொடுகொட்டி (அல்லது) கிடிகிட்டி
நரம்புக் கருவிகள் வீணை | யாழ் | தம்புரா | கோட்டு வாத்தியம் | கின்னாரம்
காற்றிசைக் கருவிகள் கொம்பு | தாரை | நாதசுவரம் | புல்லாங்குழல் | சங்கு | மகுடி | முகவீணை| எக்காளம் |கொக்கரை|மோர்சிங்
கஞ்சக் கருவிகள் தாளம் | சேகண்டி |
பிற கொன்னக்கோல் | கடம் |
"https://ta.wikipedia.org/w/index.php?title=இடக்கை&oldid=3768872" இலிருந்து மீள்விக்கப்பட்டது