தனிமப் புறவேற்றுரு
பிறதிருப்பம் அல்லது தனிமப் புறவேற்றுருமை (Allotropy) அல்லது தனிமப் புறவேற்றுமை (allotropism) என்பது சில தனிமங்கள் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மாறுபட்ட வடிவங்களில் இருக்கின்ற பண்பு ஆகும். இவ்வாறு மாறுபட்ட கட்டமைப்புகளில் உள்ள வடிவங்கள் தனிமப் புறவேற்றுருக்கள் (allotropes) என அழைக்கப்படுகின்றன. இவை தனிமத்தின் கட்டமைப்புப் படிவத்தில் மட்டுமே மாறுபட்டுள்ளன;[1] தனிமத்தின் அணுக்கள் ஒன்றொடொன்று மாறுபட்ட விதங்களில் பிணைக்கப்பட்டுள்ளன.
எடுத்துக் காட்டாக, கரிமத்தின் தனிமப் புறவேற்றுருக்கள் வைரமாக (கரிம அணுக்கள் நாற்பட்டக அணிக்கோவை அமைப்பில் பிணைக்கப்பட்டுள்ளன), காரீயமாக (கரிம அணுக்கள் அறுபக்க அணிக்கோவை அமைப்பில் பிணைக்கப்பட்டுள்ளன), கரிமத்தட்டுகளாக (ஓரணு தட்டை காரீயத் தட்டுகளாக), மற்றும் புல்லேரேன்களாக (கரிம அணுக்கள் கோள, குழல் மற்றும் நீள்வட்ட அமைப்புகளில் பிணைக்கப்பட்டுள்ளன) கிடைக்கின்றன.
தனிமப் புறவேற்றுரு என்ற கலைச்சொல் தனிமங்களுக்கு மட்டுமே வழங்கப்படுகின்றன; சேர்மங்களுக்கல்ல. அனைத்து படிக வடிவங்களுக்கும் பொருந்துகின்ற பொதுப் பெயராக பல்லுருத்தோற்றம் உள்ளது. தனிமப் புறவேற்றுமை ஒரு தனிமத்தின் ஒரே நிலையில் உள்ள வேறுபாடுகளைக் குறிக்கிறது. (காட்டாக திண்மம், நீர்மம் அல்லது வளிம நிலைகளில் உள்ள வெவ்வேறு வடிவங்கள்); திண்மம், நீர்மம் மற்றும் வளிமமாக நிலைமாறுதல் தனிமப் புறவேற்றுமை ஆகாது.
சில தனிமங்கள் வெவ்வேறு நிலைகளில் வெவ்வேறு மூலக்கூறு சூத்திரங்களைக் கொண்டுள்ளன – காட்டாக, ஆக்சிசனின் இரு தனிமப் புறவேற்றுருக்கள், (ஈரணு ஆக்சிசன்), O2 மற்றும் ஓசோன், O3), திண்மம், நீர்மம் மற்றும் வளிமம் என்ற மூன்று நிலைகளிலும் இருக்கக்கூடும். மாறாக சில தனிமங்கள் மூன்று நிலைகளிலும் தனித்தனி புறவேற்றுருக்களைக் கொண்டிருப்பதில்லை – காட்டாக பாசுபரசு திண்ம நிலையில் பல புறவேற்றுருக்களைக் கொண்டுள்ளது, ஆனால் இவை எல்லாமே உருக்கப்பட்டு நீர்ம நிலையில் P4 என்ற வடிவில் அமைகின்றன.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Allotrope in IUPAC Compendium of Chemical Terminology, Electronic/ version, http://goldbook.iupac.org/A00243.html. Accessed March 2007.
- "Allotropy". பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் (11th). (1911). Cambridge University Press.