ஒசூர்
ஒசூர்
செவிடபாடி | |
---|---|
ஆள்கூறுகள்: 12°44′27″N 77°49′31″E / 12.740900°N 77.825300°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
அரசு | |
• வகை | மாநகராட்சி |
• நிர்வாகம் | ஒசூர் மாநகராட்சி |
• துணை ஆட்சியர் | சரண்யா இ.ஆ.ப. |
பரப்பளவு | |
• மொத்தம் | 190.3 km2 (73.5 sq mi) |
• பரப்பளவு தரவரிசை | 7 |
ஏற்றம் | 889 m (2,917 ft) |
மக்கள்தொகை (2011)[1] | |
• மொத்தம் | 5,03,216 |
• அடர்த்தி | 2,600/km2 (6,800/sq mi) |
இனம் | ஒசூர்காரர் |
மொழி | |
• அலுவல் | தமிழ் |
• மற்றவை | தெலுங்கு, கன்னடம்[2] |
நேர வலயம் | ஒசநே+5:30 (இ.சீ.நே.) |
அஞ்சல் குறியீட்டு எண் | 635 109, 635 110, 635 126, 635 117, 635 129 |
தொலைபேசிக் குறியீடு | 04344[3] |
வாகனப் பதிவு | TN 70 |
பாலின விகிதம் | 1.118 ♂/♀ |
மேயர் | எஸ். ஏ. சத்யா |
ஒசூர் (Hosur) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒசூர் வருவாய் கோட்டம் மற்றும் ஒசூர் மாநகராட்சியின் தலைமையிடம் ஆகும். இந்நகரம் சென்னையிலிருந்து 306 கிலோமீட்டர் தொலைவிலும், பெங்களூர் நகரத்தில் இருந்து 40 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது. இந்த நகரம் தமிழ்நாடு மற்றும் கர்நாடக மாநில எல்லைப் பகுதியில் உள்ளது. இந்நகரம் பெருகி வரும் சிறு, குறு மற்றும் பெரிய தொழிற்சாலைகளாலும், குளிர்ந்த தட்பவெப்பநிலையாலும் அறியப்படுகிறது. ஒசூர் நகரம் முந்தைய சேலம் மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது.
புவியியல்
[தொகு]தமிழ்நாட்டில் தக்காணப் பீடபூமியில் அமைந்துள்ள பகுதியாக ஒசூரும் ஒசூரை ஒட்டிய பகுதிகள் மட்டுமே உள்ளன. இவ்வூரின் அமைவிடம் 12°26′N 77°29′E / 12.43°N 77.49°E ஆகும்.[4] கடல் மட்டத்திலிருந்து இவ்வூர் சராசரியாக 879 மீட்டர் (2883 அடி) உயரத்தில் இருக்கின்றது.வாரணாசி-கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலை எண் 7 இவ்வூரின் வழியாகச் செல்கிறது.
பெயராய்வு
[தொகு]ஒசூர் செவிடபாடி என்ற தமிழ்ப்பெயரால் அழைக்கப்பட்டது பொ.ஊ. 11-ஆம் நூற்றாண்டு சோழர் காலக் கல்வெட்டுகளால் அறியப்படுகிறது.[5] செவிடபாடி என்ற பெயர் செவிடவாடி என்றும், 13-ஆம் நூற்றாண்டில் போசளர் மன்னன் வீர இராமநாதன் ஆட்சிக்கால கல்வெட்டில் சூடவாடி எனவும் மருவி குறிப்பிடப்பட்டுள்ளது.[6] பொ.ஊ. 1674-ஆம் ஆண்டைச் சேர்ந்த மைசூர் மன்னர்கள் கால கல்வெட்டில்தான் ஹொசாவூரு என்ற பெயர் குறிக்கப்படுகிறது ஹொசவூரு-ஹொசூரு-ஹொசூர்-ஒசூர் என்று மாற்றம் அடைந்துள்ளது.[7] ஹொச என்ற கன்னடச் சொல்லின் பொருள் புதிய என்பதாகும். ஒசூர் என்பதன் பொருள் புதூர் (புதிய ஊர்) என்பதாகும்.
வரலாறு
[தொகு]செவிடபாடியானது (ஒசூர்) தலைக்காட்டை தலைநகராகக் கொண்டு ஆண்ட கங்க மன்னர்கள் ஆட்சிக்குட்பட்ட பகுதியாக இருந்துள்ளது. இவர்கள் காலத்தில் செவிடபாடியில் புகழ்பெற்ற கோயிலான சந்திர சூடேசுவரர் கோயில் கட்டப்பட்டதாக இருக்கலாம் என கருதப்படுகிறது.[8] இராசராச சோழனின் ஆட்சிக்காலத்தால் செவிடபாடியை உள்ளடக்கிய கங்க நாட்டை சோழர்கள் கைப்பற்றி தங்கள் ஆட்சிக்குள் கொண்டு வந்தார்கள். சோழப் பேரரசு வலிமை குன்றிய பிறகு போசளர்கள் செவிடபாடியைக் கைப்பற்றினர். பின்னர் விசயநகரப் பேரரசு, மைசூர் உடையார்கள், ஐதரலி, திப்பு சுல்தான் போன்றோரின் ஆட்சியின் கீழ் இருந்தது. இறுதியில் பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனத்தின் கீழ் வந்து சேர்ந்தது.
பிரித்தானிய ஆட்சிக் காலத்தில், சேலம் கலெக்டர் வால்டன் லிலியட், ஒசூரை சேலம் மாவட்டத்தின் தலைமையகமாக செய்தார். பின்னர் தலைநகரம் சேலத்துக்கு மாற்றபட்டபோதிலும் சேலம் மாவட்டத்தின் கோடைக்கால தலைநகராக ஒசூர் ஆங்கிலேயர் முடியும்வரை நீடித்தது. மாவட்ட ஆட்சியர் தலைமையகமாக ஒசூர் கென்னல்வெர்த் கோட்டையகம் திகழ்ந்தது. 1902-இல் ஒசூர் ஊராட்சி நிர்வாகம் உருவானது, 1969-இல் ஒசூர் தேர்வு நிலை பேரூராட்சியாக தரம் உயர்த்தபட்டது. 1980-ஆம் ஆண்டு தொழில்மயமாக்கல் தொடங்கிய போது சிப்காட் உதவியுடன் தமிழகத்தில் ஒசூர் ஒரு சிறந்த தொழில் வளர்ச்சி அடைந்து வரும் ஒரு முக்கிய தொழிற்சாலை நகரம் ஆனது. அதன் பிறகு ஒசூரின் வளர்ச்சி வேகமுற்றது. அதனால் 1992-ஆம் ஆண்டு இரண்டாம் நிலை நகராட்சியாக மேம்படுத்தப்பட்டது. 1998-இல் தேர்வு நிலை நகராட்சியானது. 2011-ஆம் ஆண்டு மத்திகிரி பேரூராட்சி, சூசூவாடி, மூக்கண்டப்பள்ளி, ஆவலப்பள்ளி, சென்னத்தூர் ஆகிய ஊராட்சிகள் ஒசூர் நகராட்சியுடன் இணைக்கப்பட்டு சிறப்பு நிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது.[9] 2019 பெப்ரவரி மாதம் அச்செட்டிபள்ளி ஊராட்சி, பேகேபள்ளி ஊராட்சி, சென்னசந்திரம் ஊராட்சி, கொத்தகொண்டபள்ளி ஊராட்சி, ஒன்னல்வாடி ஊராட்சி, நல்லூர் ஊராட்சி, தொரபள்ளி அக்ரஹாரம் ஊராட்சி, பேரண்டப்பள்ளி ஊராட்சி உள்ளிட்ட எட்டு ஊராட்சிகள் ஒசூருடன் இணைக்கப்பட்டு, மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. இதன்மூலம் ஒசூர் மாநகரின் பரப்பளவானது 200 சதுர கிலோமீட்டர் சுற்றளவுக்கு விரிவடைந்துள்ளது.[10]
ஒசூா் மாநகராட்சி 740 சதுர கிலோ மீட்டா் அளவுக்கு விரிவாக்கம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக ஏப்ரல் 2022-இல் அறிவிக்கப்பட்டது.[11] ஒசூர் நகரம் முந்தைய சேலம் மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது.
மக்கள்தொகை
[தொகு]இந்திய 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 1,16,821 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[12] இவர்களில் 59,411 ஆண்கள், 57,410 பெண்கள் ஆவார்கள்.மக்களின் சராசரி கல்வியறிவு 88.24% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 91.57%, பெண்களின் கல்வியறிவு 84.79% ஆகும். மக்கள் தொகையில் 13,288 ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். இங்கு தமிழ், தெலுங்கு, கன்னடம் முதலான மொழிகள் பேசப்படுகின்றன.
மக்கள் தொகை வளர்ச்சி
[தொகு]ஆண்டு | ஆண் | பெண் | மொத்தம் |
---|---|---|---|
1981 | 14471 | 12658 | 27129 |
1991 | 22355 | 19384 | 41739 |
2001 | 44648 | 39746 | 84394 |
2011 | 59411 | 57410 | 116821 |
மாநகரப்பகுதிகளின் மக்கள் தொகை 2011 (பகுதி விரிவாக்கம் பிறகு)
[தொகு]உள்ளாட்சிமன்றம் | ஆண் | பெண் | மொத்தம்[13] |
---|---|---|---|
ஒசூர் | 59411 | 57410 | 116821 |
ஜுஜுவாடி | 18602 | 13788 | 32390 |
மூக்கண்டப்பள்ளி | 20674 | 18615 | 39289 |
சென்னத்தூர் | 8728 | 6292 | 15020 |
ஆவலபள்ளி | 9367 | 8518 | 17885 |
மத்திகிரி | 12572 | 10550 | 23122 |
மொத்தம் | 129345 | 115173 | 244518 |
தொழில் வளம்
[தொகு]இந்நகரில் இயந்திரத்தொழில் நன்கு வளர்ச்சி பெற்றுள்ளது. டிவிஎஸ் மோட்டார், அசோக் லேலண்ட், டைட்டன் நிறுவனம், இந்துஸ்தான் மோட்டர்ஸ், ஹிந்துஸ்தான் யூனிலீவர் லிமிடெட், இந்துஸ்தன் யூனிவர்சல், கேடர்பிள்ளர், டாட்ரா வேக்ட்ரா, தநீஜா ஏரொஸ்பேஸ் & ஏவிஎசன் லிமிடெட், பாடா இந்திய லிமிடெட், ஆரொ கிரைநைட், மதுகான் கிரைநைட், ஏஃசஈடு, INEL-இந்தியா நிப்பான் எலக்ட்ரிக்கல்ஸ் லிமிடெட், சுந்தரம் பாஸ்ட்னர்ஸ், முதலான நிறுவனங்களின் தொழிற்சாலைகள் இங்குள்ளன. தமிழக அரசால் 1538.41 ஏக்கரில் தொடங்கப்பட்ட சிப்காட் தொழிற்பேட்டை (சிப்காட்-1 மற்றும் சிப்காட்-2) இங்கு செயல்பட்டு வருகிறது.
போக்குவரத்து
[தொகு]ஒசூரில் இருந்து தோபஷபெட் வரை செல்லும் தேசிய நெடுஞ்சாலை என்.எச்.207 இங்கு இருந்து ஆரம்பமாகிறது. அதேபோல் இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலை என்.எச்.44 (பழைய எண் என்.எச்.7) உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் உள்ள வாரணாசி (காசி அல்லது பெனாரஸ்) என்னும் நகரத்தில் இருந்து தமிழ் நாட்டில் உள்ள கன்னியாகுமரி நகரையும் இணைக்கும் இந்த சாலை ஒசூர் வழியாகச் செல்கிறது.
பேருந்து நிலையம்
[தொகு]ஒசூரின் மையப்பகுதியில் அமரர் கே.அப்பாவு பிள்ளை பேருந்து நிலையம் அமைந்துள்ளது. இப்பேருந்து நிலையத்திலிருந்து தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் கீழ் இயக்கப்படும் பேருந்துகள் மற்றும் கருநாடக, ஆந்திரப் பிரதேச அரசுடமை பேருந்துகள் மற்றும் தனியார் நிறுவனப் பேருந்துகள் அதிக அளவில் இயக்கப்படுகின்றன. ஆகஸ்டு 31, 2007-இல் பழைய பேருந்து நிலையத்தின் திட்டம் ஆரம்பித்து சுமார் 10.5 கோடி ருபாய் மதிப்பில் புதிய நவீன பேருந்து நிலையம் கட்டப்பட்டு, ஒசூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், பேரூராட்சித் தலைவரான கே. அப்பாவு பிள்ளை அவர்களின் பெயரில் கே. அப்பாவு பிள்ளை பேருந்து நிலையம் என்று பெயர் வைக்கப்பட்டு ஜூலை 18, 2010-இல் தமிழகத்தின் முன்னாள் துணை முதலமைச்சரும், திராவிட முன்னேற்றக் கழகத் தலைவருமான மு. க. ஸ்டாலின் அவர்களால் துவக்கி வைக்கபட்டது. இந்த பேருந்து நிலையம் 53 பேருந்து விரிகுடாக்களுடன் கூடிய நவீன வசதிகளுடன் அமைந்துள்ளது. இதில் தரை தளத்தில் 48 கடைகள் மற்றும் முதல் தளத்தில் 28 கடைகள் உள்ளன. விழுப்புரம் அரசு போக்குவரத்துக்கழக கோட்டம் சார்பில் இயக்கப்படும் (VOLVO A/c) வால்வோ குளிர்சாதன பேருந்து வழி எண்-503 சென்னை முதல் ஒசூர் வரை இயக்கப்படுகின்றது.
விமான நிலையம்
[தொகு]ஒசூரின் வான்வெளிக்களம் இந்தியாவில் பொது விமான போக்குவரத்து விமானங்கள் உற்பத்தி செய்யும் முதல் தனியார் துறை நிறுவனம் 1994-இல் நிறுவப்பட்டது. தானுஜா விண்வெளி மற்றும் விமான லிமிடெட் (தால்), நிர்வகிக்கப்படுகிறது. இங்கு ஏர்பஸ் ஏ 320 மற்றும் போயிங் 737 விமானம் ஏற்று திறன் 7012 அடி நீண்ட மற்றும் 150 அடி அகலம், 09/27 சார்ந்த ஒரு நிலக்கீல் ஓடுபாதை மற்றும் இரவு இறங்கும் வசதிகள் உள்ளன. பெங்களூர் சர்வதேச மற்றும் உள்நாட்டு விமான நிலையம் 80 கி.மீ. தொலைவில் உள்ளது.
தொடருந்து நிலையம்
[தொகு]ஒசூர் தொடருந்து நிலையம் தென் மேற்கு ரயில்வே பெங்களூரு-சேலம் ரயில் பாதை உள்ளது. அருகில் உள்ள முக்கிய ரயில் நிலையம் பெங்களூர் நகர சந்திப்பு (40 கி.மீ.) ஆகும்.
இந்த ரயில் நிலையத்தில் கீழ்கண்ட வசதிகள் உள்ளன.
- கணினிமயமாக்கப்பட்ட முன்பதிவு மையம்
- புத்தக விற்பனை நிலையம்
- ஐ. ஆர். சி. டி. சி தேனீரகம்
- ஆவின் பாலகம்
- பயணத் தேவைகள் அடங்கிய அங்காடி
- ரயில் இருப்பிடங்காட்டி/ ஓடும் நிலை அறியும் சேவை
- ஒலிபெருக்கி அறிவிப்பு சேவை
வண்டி எண் | வண்டியின் பெயர் | ஆரம்ப நிலையங்கள் | இறுதி நிலையம் |
---|---|---|---|
|
சிறப்பு பயணிகள் ரயில் | ஒசூர் | யஷ்வந்த்பூர் சந்திப்பு |
|
சிறப்பு பயணிகள் ரயில் | யஷ்வந்த்பூர் | ஒசூர் |
|
புதுச்சேரி வாராந்திர விரைவு வண்டி | யஷ்வந்த்பூர் சந்திப்பு | புதுச்சேரி |
|
கொங்கு விரைவுவண்டி | தில்லி ஹஸ்ரத் நிஜாமுதீன் | கோயம்புத்தூர் முக்கிய சந்திப்பு |
|
தூத்துக்குடி விரைவுவண்டி | மைசூர் சந்திப்பு | தூத்துக்குடி |
|
கே.எஸ்.ஆர் பெங்களூரு - எர்ணாகுளம் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் | பெங்களூரு நகர சந்திப்பு | எர்ணாகுளம் சந்திப்பு |
|
கண்ணூர் விரைவு வண்டி | யஷ்வந்த்பூர் சந்திப்பு | கண்ணூர் |
|
கொச்சுவேலி கரிப் ரத விரைவு வண்டி | யஷ்வந்த்பூர் சந்திப்பு | கொச்சுவேலி சந்திப்பு |
|
தாதர் சென்ட்ரல் - திருநெல்வேலி சாளுக்கியா வாராந்திர சிறப்பு ரயில் | தாதர் சென்ட்ரல் | திருநெல்வேலி சந்திப்பு |
|
சேலம் விரைவு ரயில் | யஷ்வந்த்பூர் சந்திப்பு | சேலம் சந்திப்பு |
|
பயணிகள் ரயில் | பெங்களூரு நகர சந்திப்பு | தருமபுரி |
|
மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் | மைசூர் சந்திப்பு | மயிலாடுதுறை சந்திப்பு |
|
காரைக்கால் விரைவு வண்டி | பையப்பனஹள்ளி | காரைக்கால் |
|
நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் | பெங்களூரு நகர சந்திப்பு | நாகர்கோவில் சந்திப்பு |
|
கோயம்புத்தூர் விரைவுவண்டி | மும்பை லோக்மானிய திலக் டெர்மினஸ் | கோயம்புத்தூர் சந்திப்பு |
பள்ளிக்கூடங்கள்
[தொகு]- அரசு மேல்நிலைப்பள்ளி முல்லை நகர்
- ஆர்.வி. அரசு ஆண்கள் உயர்நிலைப் பள்ளி
- அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளி
- அசோக் லேலாண்ட் இடைநிலை மற்றும் உயர்நிலைப் பள்ளி (நடுவண் இடைநிலைக் கல்வித்திட்டம் - CBSE)
- ஆசியன் கிருஷ்டையின் பள்ளி (நடுவண் இடைநிலைக் கல்வித்திட்டம் - CBSE)
- கேம்பிரிஜ் இடைநிலை பள்ளி
- மகரிஷி பால வித்யாமந்திர் ஆரம்ப நிலைப் பள்ளி
- மகரிஷி வித்யாமந்திர் உயர்நிலைப் பள்ளி (நடுவண் இடைநிலைக் கல்வித்திட்டம் - CBSE)
- சித்தார்த் வில்லேஜ் பள்ளி
- சிஷ்யா இடைநிலை மற்றும் உயர்நிலைப் பள்ளி (நடுவண் இடைநிலைக் கல்வித்திட்டம் - CBSE)
- ஸ்ரீ விஜய வித்தியாலயா இடைநிலை மற்றும் உயர்நிலைப் பள்ளி
- ஸ்ரீ வெங்கடேஸ்வர இடைநிலை மற்றும் உயர்நிலைப் பள்ளி
- செயின்ட் ஜோசப் இடைநிலை மற்றும் உயர்நிலைப் பள்ளி
- டி.வி.எஸ். அகெடமி இடைநிலை மற்றும் உயர்நிலைப் பள்ளி
- சி.எஸ்.ஐ. இடைநிலை மற்றும் உயர்நிலைப் பள்ளி
- பரிமளம் இடைநிலை மற்றும் உயர்நிலைப் பள்ளி
- சுவாதி இடைநிலை மற்றும் உயர்நிலைப் பள்ளி
- வேளாங்கண்ணி இடைநிலை மற்றும் உயர்நிலைப் பள்ளி
- ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் உயர்நிலைப் பள்ளி
பொறியியல் மற்றும் தொழிநுட்பவியல் கல்லூரிகள்
[தொகு]கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள்
[தொகு]- அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி
- எம்.ஜி.ஆர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி
- புனித ஜோசப் பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி
தொழிற்பயிற்சி நிலையங்கள்
[தொகு]- அரசு தொழிற்பயிற்சி நிலையம்
- புனித ஜோசப் தொழிற்பயிற்சி நிலையம்
- பெருமாள் மணிமேகலை தொழிற்பயிற்சி நிலையம்
மத்திய பட்டுப்புழு வளர்ப்பு மரபியல் மூலவளம் காப்பாற்றும் மையம்
[தொகு]ஒசூரில் மத்திய அரசால் மத்திய பட்டுப்புழு வளர்ப்பு மரபியல் மூலவளம் காப்பாற்றும் மையம் (Central Sericultural Germplasm Resources Centre (CSGRC) 1991-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதில் மனிதர்களால் சேமிக்கும், முசுக்கொட்டை (Mulberry) மற்றும் பட்டுப்புழு மரபியல் மூலவளம் காப்பாற்றிப் பாதுகாத்து வைக்கப்படுகின்றது. இது தேசிய களஞ்சியத்தின் முசுக்கொட்டை மரபியல் மூலவளம் மற்றும் தேசிய செயல்படும் மரபியல் மூலவளம் (NAGS) மையத்தின் இடமாகும். இதில் முசுக்கொட்டை மரபியல் மூலவளம் ஆராய்ச்சியும் விருத்தியும் (NAGS)/ (R&D)கில் உள்ளது. இதில் 10 அறிவியல் அறிஞர்களுக்கு மேல் சேமிப்பில் இடுபாட்டு முழுவதையும் பாதுகாத்து நிர்வாகம் செய்கிறார்கள். இங்கு பரிமாற்றம் மற்றும் தகவல் கலந்துரையாடலுக்கு இந்த மையத்தில் இணைய சேவைகள் மேம்படுத்தப்பட்டு பலதரப்பட்ட முசுக்கொட்டை மரபியல் மூலவள பற்றிய வினா கலந்துரையாடல்கள் இந்த சேவை www.silkgermplasm.com பரணிடப்பட்டது 2015-05-10 at the வந்தவழி இயந்திரம் வலைத்தளத்தின் மூலம் நடக்கிறது
ஒசூர் கால்நடைப் பண்ணை
[தொகு]முதன்மைக் கட்டுரை: மாவட்ட கால்நடை பண்ணை (ஒசூர்)
ஒசூரில் உள்ள கால்நடைப் பண்ணை 1824-ஆம் ஆண்டு குதிரை வளர்ப்பு மற்றும் இனப்பெருக்கம் செய்யவும் பிரித்தானிய அரசாங்கத்தால் 1641.41 ஏக்கரில் நிறுவப்பட்டது. இந்த பண்ணை ஆசியாக் கண்டத்தில் உள்ள மிகப்பெரிய பண்ணைகளில் ஒன்று ஆகும்.
இங்கு ஜெர்சி மாடுகள், ஜெர்சி கலப்பினம், ஹோல்ஸ்டீன் பிரசியன் கலப்பினம், சிவப்பு சிந்தி, காங்கேயம் ஆகிய மாட்டினங்களும், மேச்சேரி செம்மறி, திருச்சி கருப்பு செம்மறி போன்ற செம்மறி ஆடுகளும், கொடி ஆடு, தலைச்சேரி போன்ற வெள்ளாட்டு இனங்களும், லார்ஜ் ஒயிட் யார்க்ஷயர் வெண் பன்றி இனமும், கத்தியவார், தூய இனம் ஆகிய குதிரை இனங்களும், கிரிராஜா, அசில், வெள்ளை லெக்கார்ன் ஆகிய கோழி இனங்களும், வான்கோழிகள் ஆகியவை வளர்ப்பு மற்றும் இனப்பெருக்கம் செய்யப்படுகின்றன.
முக்கிய நபர்கள்
[தொகு]சக்ரவர்த்தி இராசகோபாலாச்சாரி (1878–1972), ஒசூர் அருகில் உள்ள தொரப்பள்ளி கிராமத்தில் பிறந்த இந்திய விடுதலைப் போராட்ட வீரர். தமிழ்நாடு அரசு சக்கரவர்த்தி இராசகோபாலாச்சாரி நினைவைப் போற்றும் வகையில் கிருட்டிணகிரி மாவட்டம் தொரப்பள்ளியில் அவர் வாழ்ந்த இல்லத்தை நினைவு இல்லமாகவும், அவரது உடல் அடக்கம் செய்யப்பட்ட இடமான சென்னை கிண்டியில் அவருக்கு நினைவு மண்டபமும் அமைத்துள்ளது
சுற்றியுள்ள பகுதிகளில் ஆர்வமூட்டும் இடங்கள்
[தொகு]இடம் பெயர் | இடங்கள் பார்க்க | தொலைவு | வழி |
---|---|---|---|
சந்திரசூடேசுவரர் கோயில் (மலைக் கோவில்) | கோவில் மற்றும் முழு ஒசூரின் பசுமையும் பார்க்க | 1 கிமீ | நகரத்தின் உள்ளே |
வெங்கடேஸ்வர சுவாமி திருக்கோயில் | கோவில் | 1 கிமீ | நகரத்தின் உள்ளே |
தொரப்பள்ளி | சக்ரவர்த்தி இராசகோபாலாச்சாரி பிறந்த இடம் - இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரல். | 11 கிமீ | இராயக்கோட்டை நோக்கி |
மத்திகிரி | கால்நடை பண்ணை | 6 கிமீ | தேன்கனிகோட்டை செல்லும் வழியில் |
கெலவரப்பள்ளி நீர்தேக்கம் | நீர்த்தேக்கம், பூங்கா | 10 கிமீ | ஆவலப்பள்ளி வழியாக |
உத்தனப்பள்ளி | அகரம் பாலமுருகன் கோயில் | 17 கிமீ | இராயக்கோட்டை செல்லும் வழி |
தளி | லேக் வியூ (லிட்டில் இங்கிலாந்து) | 27 கிமீ | ஒசூர் மற்றும் தளி வழியில் |
இராயக்கோட்டை | மலைக் கோட்டை | 30 கிமீ | ஒசூர் மற்றும் இராயக்கோட்டை வழியில் |
ஒகேனக்கல் | அருவி | 67 கிமீ | அஞ்செட்டி வழியாக |
பெட்டமுகிளாலம் | கிருஷ்ணகிரியின் ஏற்காடு மலை | 58 கிமீ | தேன்கனிக்கோட்டை வழியாக |
வேளாண்மை
[தொகு]ஒசூரில் இருந்து காய்கறிகள் நாள் ஒன்றுக்கு குறைந்தது 500 சரக்குந்துகள் மூலம் தென்னிந்திய மாநிலங்களுக்கு அனுப்பப்படுகிறது. இங்கு தக்காளி, முட்டைக்கோசு, வெங்காயம், சென்னிற முள்ளங்கி, வெள்ளை முள்ளங்கி, குடைமிளகாய், பீட்ரூட், கேரட், புடலங்காய், பின்ஸ், கொத்தமல்லி, நூகொல், பூக்கோசு, திராட்சை பழம் மற்றும் மாம்பழம் உள்ளிட்ட காய்கறிகள் விளைகின்றன
தாவரவளர்ப்பு
[தொகு]ஒசூரில் குளிர்ந்த வெப்பநிலை காரணமாக இங்குள்ள விவசாயிகளால் வளர்க்கப்படும் ரோஜாக்கள் டன்ஃப்லோரா (Tanflora) வால் விவசாயிகளிடமிருந்து சேகரிக்கப்பட்டு, பதப்படுத்தப்பட்டு, டன்ஃப்லோரா (Tanflora) என்ற பெயரில் சந்தைப்படுத்தப்படுகிறது. முதன்மையாக ஐரோப்பா, ஆஸ்திரேலியா, மத்திய கிழக்கு, தூர கிழக்கு மற்றும் ஜப்பானுக்கு ஏற்றுமதியாகிறது. மேலும் உள்நாட்டு சந்தையில் அதிகரிப்பின் காரணமாக, நல்ல மலர்கள் முக்கியமாக தில்லி, ஐதராபாத், சென்னை சந்தையில் விற்கப்படுகின்றன.
இங்கு சுமார் 80,000 ச.அடி. குளிர் அறை வசதிகள் 19,000 ச.அடி. உட்பட தர மண்டபம், இதில் ஆண்டிற்கு சுமார் 95 மில்லியன் தண்டுகள் கையாள முடியும்.[14]
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Hosur Population".
- ↑ "WELCOME TO CENSUS OF INDIA : Census India Library". www.censusindia.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2016-04-26.
- ↑ "STD Codes (Tamil Nadu)". Archived from the original on 2011-07-19. பார்க்கப்பட்ட நாள் 2009-10-19.
- ↑ "Hosur". Falling Rain Genomics, Inc. பார்க்கப்பட்ட நாள் ஜனவரி 30, 2007.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ ஒசூர் அருள்மிகு சந்திரசூடேசுவரர்-ஓர் ஆய்வு,இரா.இராம கிருட்டிணன், பக்கம் 4
- ↑ ஒசூர் அருள்மிகுசந்திரசூடேசுவரர்-ஓர் ஆய்வு, இரா.இராம கிருட்டிணன், பக்கம் 5
- ↑ ஒசூர் அருள்மிகு சந்திரசூடேசுவரர்-ஓர் ஆய்வு, இரா. இராம கிருட்டிணன், பக்கம் 4
- ↑ ஒசூர் அருள்மிகு சந்திரசூடேசுவரர்-ஓர் ஆய்வு,இரா.இராம கிருட்டிணன், பக்கம் 8
- ↑ http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/hosur-municipality-to-expand-after-merger-with-5-panchayats/article2146259.ece
- ↑ "8 பஞ்சாயத்துகள் இணைந்து புதிய மாநகராட்சியானது ஒசூர்". இந்து தமிழ்: 5. பெப்ரவரி 14 2019.
- ↑ "ஓசூர் மாநகராட்சி 'மாஸ்டர் பிளான்' - நடப்பது என்ன?". Samayam Tamil. பார்க்கப்பட்ட நாள் 2022-04-14.
- ↑ "2011-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை". Archived from the original on 2012-04-23. பார்க்கப்பட்ட நாள் ஜனவரி 30, 2013.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help); Unknown parameter|=
ignored (help) - ↑ http://www.census2011.co.in/census/city/491-hosur.html
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2012-07-01. பார்க்கப்பட்ட நாள் 2012-07-09.
வெளி இணைப்புகள்
[தொகு]- Hosur Municipality பரணிடப்பட்டது 2008-06-21 at the வந்தவழி இயந்திரம்
- Hosur பரணிடப்பட்டது 2010-02-09 at the வந்தவழி இயந்திரம்