உள்ளடக்கத்துக்குச் செல்

அல்பனா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அல்பனா அல்லது அல்போனா ( Alpana or Alpona ) என்பது ஒருவகை தெற்காசிய நாட்டுப்புற கலை பாணியாகும். இது பாரம்பரியமாக பெண்களால் நடைமுறைப்படுத்தப்படுகிறது. மேலும் இந்த நிகழ்வுகளில் அரிசி மாவினால் கோலம் போட்டு அதனுள் வண்ணப்பொடிகளைத் தூவுவர். மேலும், சுவர்களிலும் வண்ண வடிவங்கள் மற்றும் சின்னங்கள் ஆகியவற்றையும் வரைவர். இது இந்தியாவிலும், வங்காளதேசத்திலும், வங்காளப் பகுதிக்கும் பொதுவானது. இந்துக் குடும்பங்களில், அல்பனாக்கள் மத கருப் பொருட்கள், பண்டிகைகள் மற்றும் குறிப்பிட்ட தெய்வங்களுடன் தொடர்புடைய குறியீட்டு வடிவமைப்புகளுடன் சமய உருவங்களைக் கொண்டிருக்கும். சந்தாலி பழங்குடி சமூகங்களில், அல்பனாக்கள் பெரும்பாலும் இயற்கையான பொருட்களிலிருந்து பெறப்பட்ட வடிவியல் அல்லது குறியீட்டு வடிவங்களைக் கொண்டிருக்கின்றன. பாரம்பரியமாக கிராமப்புற பெண்களின் களமாக இருந்தாலும் , அல்பனாவின் உருவகங்கள் நவீன இந்தியக் கலையில் மிகவும் செல்வாக்கு பெற்றுள்ளன. மேலும் ஜாமினி ராய், அபனிந்திரநாத் தாகூர், தேவி பிரசாத் போன்ற கலைஞர்களின் படைப்புகளிலும், திரைப்படத் தயாரிப்பாளர் சத்யஜித் ராயின் ஆரம்பகால விளக்கப்படங்களிலும் இது இணைக்கப்பட்டுள்ளன. சமகால வங்காளத்தில், பொது மற்றும் தனியார் இடங்களில் துர்கா பூஜை போன்ற மத நிகழ்வுகளின் ஒரு பகுதியாக அல்பனாக்கள் உருவாக்கப்படுகின்றன.

வங்காளதேசத்தின் மொழி இயக்க தினத்தின் போது வரையப்பட்டுள்ள அல்பனா
சுவரில் வரையப்பட்டுள்ள அல்பனா

வளர்ச்சி மற்றும் நோக்கங்கள்

[தொகு]

அல்பனாக்கள் பாரம்பரியமாக வங்காளப் பகுதியில் (நவீன மேற்கு வங்காளம் மற்றும் வங்காளதேசம்) பெண்களால் உருவாக்கப்படுகின்றன. மேலும் இது தெற்காசியாவின் பிற பகுதிகளில் உள்ள நிறக்கோலம், கோலம் மற்றும் சௌக் பூரணா போன்ற நுட்பமான ஒரு சடங்கு கலையின் ஒரு வடிவமாகும். ஆனால் தனித்துவமான உருவங்களுடன் மற்றும் வடிவங்களை இது கொண்டிருக்கும். [1] [2] இது பயிர்த்தொழிலின் பின்னணியில் தோன்றியிருக்கலாம். [2]

அல்பனாவில் பயன்படுத்தப்படும் குறியீட்டு வடிவங்கள் பெண்களால் பராமரிக்கப்படும் மத விரதங்களுடன் இணைக்கப்பட்டுள்ளன. இந்த விரதங்கள் குறிப்பிட்ட தெய்வங்களை வணங்க வேண்டும் என்பதிலும், அவர்களின் ஆசீர்வாதங்களை பெறவேண்டியும், மத தூய்மை பற்றிய கருத்துக்களுடன் தொடர்புடையதாகவும் இருக்கிறது. [3] அல்பனாக்களின் பயன்பாடு மத விழாக்களுடன் நெருக்கமாக தொடர்புடையது: உதாரணமாக, பாரம்பரியத் திருமணங்கள், பெயரிடும் சடங்குகள் மற்றும் பண்டிகைகளின் போது அவை அலங்காரமாகவும் விழாவின் ஒரு பகுதியாகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.[3] உதாரணமாக, மேற்கு வங்காளத்தின் சில பகுதிகளில், உண்ணாவிரதத்தின் முடிவைக் குறிக்கும் வகையில் அல்பனாக்கள் உருவாக்கப்பட்டு, சிறப்பு வழிபாட்டு விழாவும் நடத்தப்படுகின்றன.[1] இலட்சுமி தேவியின் நினைவாக நிகழ்த்தப்படும் அல்பனாவில் அவரது வாகனம், ஆந்தை, அத்துடன் தானியக் களஞ்சியம், சங்கு மற்றும் தாமரை மலர்கள் போன்ற அவருடன் தொடர்புடைய சின்னங்கள் மற்றும் உருவங்கள் வரையப்பட்டிருக்கும்.[1] பொதுவாக தரையில் வீட்டின் உள்ளே உருவாக்கப்பட்ட நேரியல் வடிவமைப்புகள், செழுமையின் தெய்வமான லட்சுமி வீட்டிற்குள் நுழைந்ததைக் குறிக்கும். இது ஒரு ஆசீர்வாதத்தைக் குறிக்கிறது.[2] மையக்கருத்துகள் எப்போதும் ஒரு கட்டமைக்கப்பட்ட அமைப்பில் ஒழுங்கமைக்கப்படுவதில்லை. மேலும் அவை பெரும்பாலும் மலர் வடிவமைப்புகள் மற்றும் வடிவியல் வடிவங்களுடன் இருக்கும்.[4] சிலைகளுக்கான அலங்கார பீடங்களாக வட்ட அல்பனாக்களும் உருவாக்கப்படுகின்றன. மேலும் சுவர்களில் வரையப்படும் அல்பனாக்கள் தெய்வங்களையும் மத பாரம்பரியத்தின் காட்சிகளையும் விளக்குகின்றன.[4] பாரம்பரிய அல்பனா வடிவமைப்புகள் குறிப்பிட்ட பருவங்கள் அல்லது பண்டிகைகள் தொடர்பானவற்றுடன் இணைக்கப்படலாம். உதாரணமாக, பருவமழையின் போது, நெல் விதைப்பதைக் குறிக்கும் வகையில், பகட்டான அரிசிக்கட்டு அல்பானாவின் ஒரு பகுதியை உருவாக்கலாம். [5] குறிப்பிட்ட சின்னங்களைப் பயன்படுத்துவதன் மூலம் நோயைத் தடுப்பது போன்ற குறிப்பிட்ட கலாச்சார அக்கறைகளுடன் சில அல்பனாக்கள் இணைக்கப்படலாம்.[6] சந்தாலி பழங்குடி சமூகங்களில், அல்பனாக்கள் இயற்கையிலிருந்து வரையப்பட்ட வடிவியல் மற்றும் குறியீட்டு வடிவங்களைக் கொண்டிருக்கும். [7]

வங்காளத்தில் துர்கா பூஜை கொண்டாட்டங்களில் அல்பனாக்கள் குறிப்பிடத்தக்க அம்சமாகும்.[8] அல்பனா என்ற சொல் 'பூச்சு' எனப் பொருள்தரும் சமசுகிருத வார்த்தையான அலிம்பனா என்பதிலிருந்து உருவானது.[9]

பாதுகாப்பு, நவீன கலை மற்றும் பிரபலமான கலாச்சாரம்

[தொகு]

சமகால அல்பனாக்கள் மிகவும் பொதுவானவை அல்ல. மேலும் கலை வடிவத்தை புதுப்பிக்கும் முயற்சியில், கலை மற்றும் கலாச்சார பாரம்பரியத்திற்கான இந்திய தேசிய அறக்கட்டளை (ஒரு இலாப நோக்கற்ற கலைப் பாதுகாப்பு அமைப்பு) மற்றும் தரிச்சா அறக்கட்டளை, விரிவுரைகள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் மூலம் கலைஞர்களைப் பயிற்றுவிப்பதற்கான முயற்சிகளைத் தொடங்கியுள்ளது.[1] கலை வடிவத்தை புத்துயிர் பெறுவதற்கான நவீன முயற்சிகள் பொது நிகழ்ச்சிகளில் அடங்கும். இதில் பல தெருக்களில் நீண்டு செல்லும் அல்பனங்கள் தன்னார்வலர்களால் உருவாக்கப்படுகின்றன. அதே போல் அல்பனா போட்டிகள், பெரும்பாலும் துர்கா பூஜைகளின் போது நடத்தப்படுகின்றன.[10] [11] [12] 1980களில், அல்பனா வடிவங்களை பாரம்பரிய மையக்கருத்துக்களை கற்பிப்பதற்கும் பிரதியெடுப்பதற்கும் அல்பனர் போயிஸ் என்ற சிறுபுத்தகங்கள் அச்சிடப்பட்டு, பயன்படுத்தப்பட்டன.[13] மேற்கு வங்கத்தின் சில பகுதிகளில், தேர்தல் பிரசாரத்தின் ஒரு பகுதியாக அரசியல் கட்சிகளின் சின்னங்கள் அடங்கிய அல்பனாக்களைப் பயன்படுத்துவதும் நிகழ்ந்துள்ளது.[14] சுகுமாரி தேவி, கிரண்பாலா தேவி மற்றும் ஜமுனா சென் உள்ளிட்ட பிரபல கலைஞர்களால் விஸ்வ பாரதி பல்கலைக்கழகத்தின் நுண்கலைத் துறையான கலா பவனில் அல்பனாக்கள் உருவாக்கம் ஒரு கலை வடிவமாக கற்பிக்கப்படுகிறது. [4]> 2016 ஆம் ஆண்டில், கலா பவனில் இளங்கலைப் பட்டதாரிகளுக்கான அடித்தளப் பாடத்தின் ஒரு பகுதியாக இது மாற்றப்பட்டது. மேலும் மாணவர்கள் இப்போது மிகவும் பொதுவான சில பாரம்பரிய வடிவங்கள் மற்றும் வடிவமைப்புகளில் பயிற்சி பெற்றுள்ளனர்.[5]

இந்திய நவீன கலைஞரான நந்தலால் போஸ், அடிக்கடி தனது கலையில் அல்பனாக்கள் மற்றும் அவற்றின் பாரம்பரிய உருவங்களை, குறிப்பாக இலையுதிர்கால மலர் போன்ற மலர் உருவங்களை வரைந்தார்.[15][4] ஓவியரும் எழுத்தாளருமான அபனீந்திரநாத் தாகூர் தனது பங்ளார் ப்ரோடோ என்ற புத்தகத்தில் அல்பனாக்கள் பற்றிய ஆய்வை எழுதி, அவற்றின் உருவங்களை பண்டைய எகிப்தின் எழுத்து வடிவங்களுடன் ஒப்பிட்டார். [13] திரைப்படத் தயாரிப்பாளர், சத்யஜித் ரே, விளம்பரம் மற்றும் வரைகலை வடிவமைப்பில் தனது வாழ்க்கையைத் தொடங்கினார். விளம்பரங்கள், விளக்கப்படங்கள் மற்றும் புத்தகங்களின் அட்டைகளில் அல்பனாக்களிலிருந்து உருவங்களை பயன்படுத்தினார்.[16] [17] கலைஞரான ரபி பிஸ்வாஸ், பெண் குடும்ப உறுப்பினர்களால் கற்பிக்கப்படும் பாரம்பரிய அல்பனாக்களைப் பாதுகாக்கவும் பதிவு செய்யவும் உழைத்துள்ளார். மேலும், இப்போது மேற்கு வங்காளத்தில் இக்கலையை கற்றுக்கொடுக்கிறார்.[6] நவீன கலைஞரான ஜாமினி ராய் தனது படைப்புகளில் அல்பனாக்களிலிருந்து பெரிதும் ஈர்க்கப்பட்டார்.[18] ஓவியரும், குயவரும் மற்றும் புகைப்படக்கலைஞருமான தேவி பிரசாத் தனது மண்பாண்டங்களில் அலங்காரக் கூறுகளாக அல்பனா உருவங்களைத் தனது படைப்பில் இணைத்தார்.[19]

வங்காளதேசத்தில், மொழி தினம் (பாஷா திபாஷ்) போன்ற தேசிய விழாக்களைக் கொண்டாட அல்பனாக்கள் வரையப்படுகின்றன.[13]

இத்னையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 1.3 "Reviving a vanishing folk art form in Bengal". The Hindu Group. 27 December 2016. http://www.thehindu.com/news/national/other-states/Reviving-a-vanishing-folk-art-form-in-Bengal/article16083431.ece. 
  2. 2.0 2.1 2.2 SenGupta, Amitabh (2012-06-14). Scroll Paintings of Bengal: Art in the Village (in ஆங்கிலம்). AuthorHouse. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4772-1383-4.
  3. 3.0 3.1 Chaitanya (1976). A History of Indian Painting (in ஆங்கிலம்).
  4. 4.0 4.1 4.2 4.3 Sujatha (2014-06-23). "Floored by an art tradition" (in en-IN). https://www.thehindu.com/features/metroplus/events/floored-by-an-art-tradition/article6142188.ece. 
  5. 5.0 5.1 TNN (15 August 2016). "Alpana decision taken at Kala Bhavan" (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-03-02.
  6. 6.0 6.1 "Meet Rabi Biswas - The Artist Who's Kept The Ancient Indian Artform Of Alpana Alive Till Today" (in Indian English). 2016-11-20. பார்க்கப்பட்ட நாள் 2022-03-02.
  7. Hansda Sowvendra Shekhar. "'In Forest, Field and Factory': This unusual book opens up glimpses of Santal Adivasi houses" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-03-02.
  8. "Durga Puja is… the world's largest street art festival: Tanusree Shankar". பார்க்கப்பட்ட நாள் 2022-03-02.
  9. "Made of rice flour, a floor decoration..." பார்க்கப்பட்ட நாள் 2022-03-02.
  10. "Phulia creates 3km-long alpana in 10 hours". பார்க்கப்பட்ட நாள் 2022-03-02.
  11. "Art students & puja have become inseparable". பார்க்கப்பட்ட நாள் 2022-03-02.
  12. "Kolkata heralds Durga Puja with longest floor art". பார்க்கப்பட்ட நாள் 2022-03-02.
  13. 13.0 13.1 13.2 "The writ, it's floored". பார்க்கப்பட்ட நாள் 2022-03-02.
  14. "Art and culture lend a dash of colour to West Bengal elections - Sentinelassam". பார்க்கப்பட்ட நாள் 2022-03-02.
  15. Chowdhury, Chitranibha (2020-01-02). "In the Bower of Art". Art in Translation 12 (1): 71–81. doi:10.1080/17561310.2020.1770963. https://doi.org/10.1080/17561310.2020.1770963. 
  16. "'Ray Between the Covers': An exhibition that celebrates the filmmaker's artistic talent" (in ஆங்கிலம்). 2022-02-22. பார்க்கப்பட்ட நாள் 2022-03-02.
  17. "Online exhibition on Satyajit Ray as children's magazine illustrator" (in அமெரிக்க ஆங்கிலம்). 2021-06-15. பார்க்கப்பட்ட நாள் 2022-03-02.
  18. "Treasures by Jamini Roy - first modernist master of Indian art". 2016-02-09. https://www.business-standard.com/article/pti-stories/treasures-by-jamini-roy-first-modernist-master-of-indian-art-116020900282_1.html. 
  19. Ahuja (2022-01-26). The Making of a Modern Indian Artist-Craftsman: Devi Prasad (in ஆங்கிலம்).
"https://ta.wikipedia.org/w/index.php?title=அல்பனா&oldid=3885336" இலிருந்து மீள்விக்கப்பட்டது